×

எதார்த்த கவிஞர் நா.முத்துகுமார் நினைவு தினம்

 

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த கவிஞர் நா.முத்துமாரின் 8ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
கவிஞர் வாலி, வைரமுத்து ஆகியோர் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த காலத்தில் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். தமிழ் அன்னை தமிழ் ஊட்டி வளர்த்த மற்றுமொரு தவப்புதல்வனான இவர், கோலிவுட்டில் 1999ஆம் ஆண்டு அறிமுகமானார். ஆரம்ப காலகட்டத்திலேயே மின்சார கண்ணா படத்தில் "ஓ அங்கிள்" பாடல் உள்ளிட்ட பல பாடல்களில் ஆங்கில வார்த்தைகள் மையம் கொண்டு இருந்த தமிழ் திரையிசை பாடல்களை தனது இன்பத்தமிழால் தாலாட்டியவர்.

இந்த காஞ்சிபுரத்துக் கம்பன் நம்மை விட்டுப் பிரிந்து இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு இதே தினத்தில் நா.முத்துக்குமார் என்ற மகா கலைஞன் நீண்ட உறக்கத்திற்கு சென்றார். கவிஞர் நா.முத்துக்குமார் தனது வாழ்வியலில் இருந்து அனுபவங்களில் இருந்து பாடல்களை எழுதினார்.தனது கவிதைகளில் பல புதுமைகளை புகுத்தினார். காதல், காமம், கண்ணீர், நட்பு, பாசம் என அத்தனை மனித உணர்ச்சிகளுக்கு உருவகம் கொடுத்து பாடல்கள் எழுதினார். அதேபோல் நா.முத்துக்குமார் தனது 'தூர்' என்ற கவிதை மூலம் மிகப் பெரிய கவனம் பெற்றார்.சிறுவயதில் புழுதிக் காட்டில் சுற்றித் திரிந்த நினைவுகளை தனது "வெயிலோடு விளையாடி" பாட்டில் காட்சிப்படுத்தினார். காதல் தோல்வியின் வலியை விட இவரது "போகாதே, போகாதே", "நினைத்து நினைத்து பார்த்தேன்" பாடல் வரிகளை கேட்டால் இன்னும் அதிகம் வலியை ஏற்படுத்தும்.

 புதுப்பேட்டை படத்தில் "ஒரு நாளில்" பாடலை கேட்டால் நிச்சயம் புது மனிதனாக நாளை விடியும் கிழக்கு என்று உற்சாகம் மனதில் பொங்கும். "எத்தனை கோடி கண்ணீர் மன் மீது விழுந்து இருக்கும், அத்தனை பார்த்த பின்பும் பூமி இன்னும் பூ பூக்கும்" என நா.முத்துகுமாரின் வார்த்தைகள் நம்பிக்கை உரமேற்றும். இப்படி பல பாடல்களில் பேனா முனையில் ஒரு பெருந்துயரை கடந்து வர செய்திருப்பார். அதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையும் இசைந்து கொடுக்கும்.மகளை பெற்ற அப்பாக்களின் தேசிய கீதமாக மாறிப் போன பாடல் "ஆனந்த யாழை மீட்டுகிறாய்". அப்பாடலில் “இரு நெஞ்சங்கள் இணைந்து பேசிய உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை” என அன்பின் ஆழத்தை இரு வரியில் வெளிப்படுத்திருப்பார். இந்த பாடல் முழுவதும் அப்பாவிற்கும், மகளுக்குமான பாசத்தை வெகு அழகான வரிகளாக எழுதியிருப்பார்.


அதேபோல் சைவம் படத்தில் "மழை மட்டுமா அழகு, சுடும் வெயில் கூட அழகு" என்று எழுதி அழகே பாடலுக்கு தேசிய விருது பெற்றார். வெயிலை வெறுக்கும் நமக்கு வெயில் அழகு என்பதை புரியவைத்தவர் நா.முத்துக்குமார்.காதலின் பிரிவு, காத்திருப்பு, ஏக்கத்தை கற்றது தமிழ் படத்தில் இடம்பெற்ற "பறவையே எங்கு இருக்கிறாய்" பாடலில் நா.முத்துக்குமார் அருமையாக எழுதியிருந்தார். காதலியை தேடி பயணிக்கும் காதலனின் வலியை "நீ போட்ட கடிதத்தின் வரிகள், கடலாக மிதந்தேனே பெண்ணே நானும் படகாக", "முதல் முறை வாழ பிடிக்குதே, முதல்முறை வெளிச்சம் பிறக்குதே" என காதல் விதைக்கும் நம்பிக்கையை நம்முள் விதைத்திருப்பார்.இப்பாடலில் இளையராஜா குரலும், யுவன் இசையும் சேர்ந்து நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்லும். இன்னும் அவர் கற்பனையில் உருவான எண்ணற்ற பாடல்கள் வழியே நம்முள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் இந்த காஞ்சிபுத்துக் கம்பன் நா.முத்துக்குமார். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நா. முத்துக்குமாரின் கவிதைகள் நம்மை தாலாட்டிக்கொண்டே இருக்கும்.