×

“மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்” - நகுல் பரபரப்பு புகார்

 


'பாய்ஸ்' படம் மூலம் நடிகராக அறிமுகமான நகுல்,  'காதலில் விழுந்தேன்' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு 'மாசிலாமணி', 'வல்லினம்', 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' உள்ளிட்ட ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் 2018-ஆம் ஆண்டு 'செய்' படம் வெளியானது. 


இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு பி.சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவான 'வாஸ்கோடகாமா' படத்தில் நடித்துள்ளார். ஆர்.ஜி கிருஷ்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் கே.எஸ். ரவிக்குமார், மன்சூர் அலிகான், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அருண் என்.வி இசையமைத்துள்ள இப்படம் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. 

இந்த நிலையில் நகுல் தன்னை பற்றி அவதூறு பேசும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், “சமீபத்தில் நான் நடித்த வாஸ்கோடகாமா படத்தில் அலுவலக பணியாளராக தன்னுடன் பணியாற்றிய சந்துரு என்பவர் தன்னைப் பற்றியும் இயக்குநர் ஆர்.ஜி. கிருஷ்ணன் மற்றும் உடன் இணைந்து பணியாற்றிய நடிகைகள் அர்த்தனா மற்றும் சுனைனா ஆகியோரை பற்றியும் அநாகரிகமாக, தவறாக யூடியூப்பில் பேட்டி அளித்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எந்தவித அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் தொடர்ந்து இழிவாக பேசி வரும் சந்துரு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு அவர் பேசிய யூடியூப் சேனலில் உள்ள அந்த காணொலியை நீக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.