×

 மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு - விளக்கமளித்த நமிதா

 

பிரபல நடிகையான நமிதா, தன்னை பா.ஜ.க. கட்சியில் இணைத்துக் கொண்டு பயணித்து வருகிறார். இவர் இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்ற போது, அங்கு உள்ளே செல்ல சான்றிதழ் கேட்டதாக வீடியோவுடன் குற்றச்சாட்டை வைத்தார். அந்த வீடியோவில், “மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்தினர் எங்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்துவிட்டனர். தமிழ்நாட்டில் மட்டுமல்ல திருப்பதி உள்ளிட்ட பல்வேறு இந்து கோவில்களுக்கு நான் சென்று வந்திருக்கிறேன். அப்படி இருக்கும்பொழுது மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் மட்டும் என்னை செல்ல விடாமல் எப்படி தடுக்கலாம்” என கேள்வி எழுப்பி இருந்தார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தில், மேலதிகாரிகளை கேட்டுவிட்டு கோவிலுக்குள் அனுமதிக்கிறோம் சற்று நேரம் ஓய்வாக நில்லுங்கள் என்று பணியிலிருந்த கோயில் கண்காணிப்பாளர் வெண்மணி சொல்லியிருக்கிறார். அதற்குள் அவருடைய கணவரும், நமீதாவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோவில் கண்காணிப்பாளர் இணை ஆணையராக உள்ள கிருஷ்ணன் என்பவரிடம் கேட்டு இருவரையும் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதி அளிக்கப்பட்டது. நமீதாவிடம் காட்டமாக நடந்து கொள்ளவில்லை. கோவில் விதிப்படிதான் பேசினோம்” என தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக தற்போது நமிதாவும் அவரது கணவரும் செய்தியாளர்களை சந்தித்து நடந்ததை விவரித்துள்ளனர். அப்போது நமிதா பேசுகையில் “கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நாங்கள் இருவரும் சென்றோம். பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இருக்க கூடாது என்பதற்காக மாஸ்க் அணிந்துகொண்டு உள்ளே சென்றோம். அப்போது கோயில் நிர்வாகத்தினர் ஒருவர் எங்களிடம் ‘நீங்கள் இந்துவா?’ என்று சான்றிதழ் கேட்டார். எங்கள் குழந்தைகள் பெயர் கூட கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட பெயர்தான் என்றெல்லாம் அவரிடம் கூறினோம். அதற்கு அவர் ‘இதெல்லாம் நாங்க தெருஞ்சு வச்சுக்கனுமா’ என்று கேட்டார்.

அதற்கு நாங்கள் எங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் என்னை அழைத்து வந்தது மதுரையை சேர்ந்த ஐ.எஸ்.கே.சி.ஓ.என் (International Society for Krishna Consciousness) ஆட்கள்தான்.  ஐ.எஸ்.கே.சி.ஓ.என் சேர்ந்தவர்கள் வேறு மதத்திலிருந்து அழைத்து வருவார்களா? எனக் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், “வி.ஐ.பி. சிறப்பு தரிசனம் கேட்டபோது அந்த நிர்வாகி ‘உங்களுக்கு கிடையாது’ என்றார். அதன் பிறகு மற்றவர்களைப்போல விதிமுறைகளை நாங்களும் பின்பற்றினால் கூட்ட நெரிசல் ஏற்படும். அதை எங்களால் சமாளிக்க முடியாது என சொன்னோம். அதற்கு அவர் ‘ஏன் முடியாது’ என்று கூறினார். அவர் கேட்ட விதமும் நடந்து கொண்ட விதமும் மோசமாக இருந்தது” என்று நமிதா விளக்கம் கொடுத்தார்.