ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ்? சிவாஜி புரொடெக்சன்ஸ் நிறுவனம் விளக்கம்...!
சந்திரமுகி படத்தின் காட்சிகளை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதற்காக நடிகை நயன்தாராவிடம் இருந்து ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்கவில்லை என சிவாஜி புரொடெக்சன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நயன்தாரா ஆவணப்படத்தில், சந்திரமுகி படத்தின் காட்சிகள் பயன்படுத்தியதாக கூறி, அதன் தயாரிப்பு நிறுவனம் மான நஷ்டஈடு கேட்டதாக தகவல் வெளியான நிலையில், இதற்கு சிவாஜி புரொடெக்ஷன்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமண வீடியோக்கள் அடங்கிய ஆவணப்படம், (‘Nayanthara: Beyond the Fairy Tale’ ) இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் (Netflix) ஓடிடி தளதில் வெளியானது.இந்த ஆவணப்படத்தில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நயன்தாரா நடித்த ‘நானும் ரௌடி தான்’ படத்தின் காட்சிகளை அனுமதி பெறாமல் பயன்படுத்தியதற்காக, அப்படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்ட நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதுதொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நயன்தாராவின் ஆவணப்படத்தில், ‘சந்திரமுகி’ திரைப்படத்தில் உள்ள 13 நொடி காட்சிகள் அனுமதி பெறாமல் பயன்படுத்தியுள்ளதாக கூறி, படத்தின் தயாரிப்பு நிறுவனமான சிவாஜி புரோடெக்ஷன்ஸ் (Sivaji Productions), நடிகை நயன்தாராவுக்கும், ஓடிடி தளத்துக்கும் (Netfilx OTT) ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.இதற்கு சந்திரமுகி பட தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. நயன்தாராவுக்கு எதிராக நாங்கள் எந்தவித புகாரும் அளிக்கவில்லை, நோட்டீசும் அனுப்பவில்லை. சந்திரமுகி படத்தின் காட்சிகளை பயன்படுத்த ஏற்கெனவே அனுமதி வழங்கிவிட்டோம் என்றும் விளக்கம் அளித்துள்ளது.
அதேபோன்று, நெட்பிளிக்ஸ் தொடரில், மேற்கூறிய வீடியோ காட்சிகளின் பயன்பாடு குறித்து, சிவாஜி புரொடெக்ஷன்ஸ் நிறுவனத்திடம் இருந்து எந்த ஆட்சேபனையும் இல்லை. ரவுடி பிக்சர்ஸ் கோரிக்கையின் பேரில், இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்தச் சான்றிதழின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட வீடியோ காட்சிகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு உரிமைகோரல்கள், தகராறுகளிலிருந்தும் ரவுடி பிக்சர்ஸ் (அதன் துணை நிறுவனங்கள், உரிமம் பெற்றவர்கள், துணை உரிமம் பெற்றவர்கள்) பாதிப்பில்லாமல் இருக்கும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.