×

25வது ஆண்டை நிறைவு செய்யும் 'நீ வருவாய் என'

 

தமிழ் சினிமாவில் சில படங்கள் மறக்க முடியாத படங்களாக இருக்கும். 90 கால கட்டங்களில் வந்த பல படங்களில் காதல் தான் முதன்மையானதாக இருந்தது. அப்படிப்பட்ட காதல் கதைகளில் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதை அன்றைய ரசிகர்கள் பார்த்தனர். காதல் படங்களாக இருந்தால், பாடல்களும் சிறப்பாக இருக்க வேண்டும். காதலும் மனதை மயக்குவதாக இருக்க வேண்டும் என எதிர்பார்த்தார்கள். அப்படி ஒரு படமாக வெளிவந்து அப்போது பேசப்பட்ட படம் 'நீ வருவாய் என'.

கண்கள் தானம் என்பது அப்போது பெரும் பாராட்டைப் பெற்ற ஒரு விஷயமாக இருந்தது. அதை மையப்படுத்திய கதைதான் இந்தப் படத்தின் கதை. ஒரு கிராமத்தில் உள்ள கூட்டுறவு வங்கிக்கு வேலைக்கு வருகிறார் பார்த்திபன். அவரைத் தேடி வந்து பார்த்து கண்ணும், கருத்துமாய் பார்த்துக் கொள்கிறார் தேவயானி. தன் மீதுள்ள காதலால்தான் தேவயானி அப்படி வந்து பழகுகிறார் என பார்த்திபன் நினைக்கிறார். அதனால், பெற்றோருடன் சென்று தேவயானியை பெண் கேட்கிறார். ஆனால், அவரோ நான் பார்த்திபனைக் காதலிக்கவில்லை, பார்த்திபனின் கண்களைத்தான் காதலிக்கிறேன் என்கிறார்.

தான் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக இருந்த அஜித் விபத்தில் இறந்து போனது பற்றியும், அவரது கண்கள்தான் அதே விபத்தில் கண்களைப் பறி கொடுத்த பார்த்திபனுக்கு பொருத்தப்பட்டது என்பதைப் பற்றியும் சொல்கிறார். மனதை நேசிக்காமல் கண்களை மட்டுமே நேசித்த ஒரு பெண்ணின் காதல் என்னவானது என்பதுதான் இந்தப் படத்தின் கதை.இப்படியான காதல் கதையைக் கொடுத்த இயக்குனர் ராஜகுமாரன், பின்னர் தேவயானியைக் காதலித்து மணந்து கொண்டார் என்பது வேறு ஒரு நிஜக் கதை.

விஜய், அஜித் இணைந்து நடிக்க வேண்டிய ஒரு படம் இது. ஆனால், அஜித் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் ஆசைப்பட்டிருக்கிறார். அதை மாற்ற விரும்பவில்லை இயக்குனர் ராஜகுமாரன். எனவே, படத்தில் நடிக்க மறுத்துள்ளார் விஜய். பின்னர்தான் பார்த்திபன் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சிறப்புத் தோற்றமாக இருந்தாலும் அஜித்தின் அழகான நடிப்பு ரசிக்க வைத்த ஒன்று. பார்த்திபன், தேவயானி, ரமேஷ் கண்ணா கதாபாத்திரங்களும் நிறைவாக அமைக்கப்பட்டவை.பல சுவாரசியமான பார்த்திபன் 'டச்' கொண்ட காதல் வசனங்களும், எஸ்ஏ ராஜ்குமாரின் இசையில் அமைந்த இனிமையான பாடல்களும் இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தன. “பார்த்து பார்த்து கண்கள் பூத்ததடி...., ஒரு தேவதை வந்துவிட்டாள்... அதிகாலையில் சேவலை எழுப்பி..., பூங்குயில் பாட்டு புடிச்சிருக்கா...'” ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட் பாடல்கள்.

இப்படத்தின் 25வது ஆண்டு போஸ்டரைப் பகிர்ந்த ரசிகர் ஒருவரின் பதிவிற்கு, “இந்தப் போஸ்டரை பார்க்கத் தோன்றியது… 25 வருடங்களில் தலைகீழ் மாற்றங்கள். தலைமேல் அண்ணாந்துப் பார்க்கும் வானமாய் Mr.Ajith. Proud of him!,” எனக் குறிப்பிட்டுள்ளார் படத்தின் நாயகன் பார்த்திபன்.