×

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் முதல் பாடல் ரெடி.. அப்டேட் கொடுத்த ஜி.வி!

 


நடிகர் தனுஷ் தனது சினிமா வாழ்க்கையில் ஒரு முழுமையான சினிமா கலைஞனாக செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றார் என்றே கூறலாம். நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் என பல அவராதங்களை எடுப்பது மட்டும் இல்லாமல் அதில் வெற்றிக் கொடி நாட்டி வருகின்றார். இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ராயன் படம் ரூபாய் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. இந்தப் படம் தனுஷின் 50வது படம் ஆகும். இந்தப் படத்திற்கு முன்னர் தனுஷ் பவர் பாண்டி என்ற படத்தினை இயக்கினார். அந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இதையடுத்து இவர் இயக்கிய படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் (NEEK)படம்தான். இந்தப் படத்தின் படப்பிடிப்பை முழுவதுமாக முடித்துவிட்டுத்தான் தனுஷ் தனது 50வது படமான ராயன் படத்தினை இயக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளார். இந்நிலையில், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் மட்டும்தான் படம் குறித்த அப்டேட்களைத் தொடர்ந்து தந்தவண்ணம் உள்ளார். இந்நிலையில், அவர் தனது எக்ஸ் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.அதில், சீக்கிரமாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் முதல் பாடலை விட்டுறலாமா? ஃபர்ஸ்ட் சிங்கிள் மிக்ஸிங் கோயிங் ஆன்... 2கே கிட்ஸ் மற்றும் ஜென் இசட் தலைமுறையினருக்கான ஆல்பம் தயார்” என பதிவிட்டுள்ளார். இது ஜி.வி. பிரகாஷ்குமார் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் தனுஷ் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மேலும் இந்தப் படத்தில் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர்.