×

நிவின் பாலி மீது பாலியல் புகார்; சாட்சியாக மாறிய வினீத் ஸ்ரீனிவாசன்

 

மலையாளத் திரையுலகில் பாலியல் துன்புறுத்தல் பெண்களுக்கு தொடர்ந்து நடந்து வருவதாக சமீபத்தில் வெளியான ஹேமா கமிட்டி ஆய்வறிக்கை இந்தியத் திரையுலகை உலுக்கியுள்ளது. பிரபல நடிகைக்கு கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தையடுத்து, படப்பிடிப்பில் நடிகைகள் மற்றும் பணி பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணை குழுவை அமைத்தது கேரள அரசு. இக்குழு கடந்த 2019ஆம் ஆண்டு அம்மாநில முதல்வரிடம் ஆய்வறிக்கையை தாக்கல் செய்தது. ஆனால் அந்த ஆய்வறிக்கை பொதுவெளியில் வெளியிடப்படாமல் இருந்த நிலையில், தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டால் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து புகார் அளித்து வருகின்றனர். இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. மேலும் நடிகைகளிடம் வாக்குமூலம் பெற்று சம்பந்தப்பட்ட திரை பிரபலங்கள் மீது வழக்குப் பதிவு செய்து வருகிறது. இதுவரை இயக்குநர் ரஞ்சித், நடிகர்கள் சித்திக், கொல்லம் எம்.எல்.ஏ முகேஷ், ஜெயசூர்யா, இடவேள பாபு, மணியம் பிள்ளை ராஜு, பாபுராஜ், நிவின் பாலி உள்ளிட்டோர் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஜெயசூர்யா மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அந்த வகையில் நிவின் பாலி மீது பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார். அதாவது பட வாய்ப்பு தருவதாகக் கூறி துபாயில் வைத்து நிவின் பாலி தனக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக சிறப்பு புலனாய்வு குழுவிடம் அந்த பெண் புகார் அளித்தார். அதனடிப்படையில் எர்ணாகுளம் ஊன்னுக்கல் காவல் நிலையத்தில் நிவின் பாலி மீது பிணையில் வர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் நிவின் பாலி இந்த பாலியல் புகாரை மறுத்தார். மேலும் சட்டப்படி அதை எதிர்கொள்வேன் என்று தெரிவித்தார். 

இதையடுத்து தற்போது நிவின் பாலியல் புகார் தொடர்பாக இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன் பேசியுள்ளார். அந்த பெண் நிவின் பாலி துன்புறுத்தல் செய்ததாக கூறப்படும் நாளில் நிவின் பாலி தன்னுடன் படப்பிடிப்பில் இருந்தார் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “டிசம்பர் 14, 2023 அன்று, நிவின் பாலி என்னுடன் 'வர்ஷங்களுக்கு ஷேஷம்' படப்பிடிப்பில் இருந்தார். மறுநாள் (டிசம்பர் 15) அதிகாலை 3 மணி வரை என்னுடன்தான் இருந்தார். படப்பிடிப்பு எர்ணாகுளத்தில் உள்ள நியூக்ளியஸ் மாலில் நடந்தது. அங்கு கூட்டம் நிறைய வந்ததால், படப்பிடிப்பை க்ரவுன் பிளாசாவுக்கு மாற்றினோம். இதை முடித்துவிட்டு அவர் கேரளாவில் 'ஃபார்மா' என்ற வெப் சீரிஸ் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்” என்றார்.