×

“உண்மைக்குப் புறம்பானது” - பாலியல் புகார் குறித்து நடிகர் நிவின் பாலி விளக்கம்!
 

 

மலையாளத் திரையுலகில் பாலியல் துன்புறுத்தல் பெண்களுக்குத் தொடர்ந்து நடந்து வருவதாக சமீபத்தில் வெளியான ஹேமா கமிட்டி ஆய்வறிக்கை இந்தியத் திரையுலகை உலுக்கியுள்ளது. பிரபல நடிகைக்கு கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தையடுத்து, படப்பிடிப்பில் நடிகைகள் மற்றும் பணி பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்தது கேரள அரசு. இக்குழு கடந்த 2019ஆம் ஆண்டு அம்மாநில முதல்வரிடம் ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்தது. ஆனால் அந்த ஆய்வறிக்கை பொதுவெளியில் வெளியிடப்படாமல் இருந்த நிலையில், தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டால் சமீபத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து பாலியல் துன்புறுத்தல் குறித்துப் பல நடிகைகள் புகாரளிக்க, சம்பந்தப்பட்ட நடிகர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பிரபல நடிகர் நிவின் பாலியும் சிக்கியுள்ளார். வெளிநாட்டில் பட வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பாலியல் ரீதியாகத் தன்னை துன்புறுத்தினார் என நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக எர்ணாகுளத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் நிவின் பாலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து நிவின் பாலி மீதான வழக்கு விசாரணை சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு மாற்றப்பட்டது.  இந்நிலையில் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு நடிகர் நிவின் பாலி மறுப்பு தெரிவித்துள்ளார்.