×

பாலியல் புகார்: நடிகர் நிவின் பாலி பெயர் நீக்கம்

 

நிவின் பாலிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டில் போதிய ஆதாரமில்லை என்று கூறி காவல் துறை பதிந்த எஃப்ஐஆரிலிருந்து அவர் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

எர்ணாகுளம் மாவட்டம் நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், சிறப்பு புலனாய்வு குழுவிடம் (SIT) புகார் ஒன்றை அளித்தார். அதில் பட வாய்ப்பு தருவதாகக் கூறி வெளிநாட்டில் வைத்து நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் தனக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக தெரிவித்துள்ளார். அவரது புகாரை பதிவு செய்த சிறப்பு புலனாய்வு குழுவினர், அதனை எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஊனுக்கல் (Oonnukal) காவல் நிலையத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அதன் அடிப்படையில் நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் மீது பிணையில் வர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இது தொடர்பான விசாரணை அறிக்கையை கொத்தமங்கலம் மாவட்ட நீதிமன்றத்தில் எர்ணாக்குளம் டி.ஒய்.எஸ்.பி தாக்கல் செய்தார். அதில், புகார்தாரர் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் நிவின் பாலி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிவில் பாலிக்கு எதிரான குற்றச்சாட்டில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் ஆறாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அவர் பெயர் எஃப்ஐஆரிலிருந்து நீக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவைச் சேர்ந்த உயர் அதிகாரி கூறுகையில், “நாங்கள் நிவின் பாலியின் பயண சீட்டு விவரங்கள், அவரது கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சேகரித்து விசாரணை நடத்தினோம். இவை யாவும் அவர் மீதான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தவில்லை” என்று தெரிவித்தார்.

முன்னதாக, தன் மீதான பாலியல் புகார் குறித்து உடனடியாக பத்திரிகையாளர்களை சந்தித்த நிவின் “இது பொய் குற்றச்சாட்டு. சட்டப்படி போராடி இந்த வழக்கிலிருந்து வெளியே வருவேன்” என்று தெரிவித்திருந்தார். அதேபோல அவரின் நண்பரும், இயக்குநருமான வினீத் ஸ்ரீனிவாசன், பாலியல் புகார் அளிக்கப்பட்ட தேதியில் நிவின் பாலி தன்னுடன் ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ படபிடிப்பில் இருந்ததாக கூறியது குறிப்பிடத்தக்கது.