×

'ஒரு கிடாயின் கருணை மனு' பட இயக்குநர் சுரேஷ் சங்கையா காலமானார்
 

 

ஒரு கிடாயின் கருணை மனு, சத்திய சோதனை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சுரேஷ் சங்கையா, உடல்நலக்குறைவால் காலமானார். 

கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான, ‘ஒரு கிடாயின் கருணை மனு’ திரைப்படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனவர் சுரேஷ் சங்கையா. விதார்த்த், ரவீனா ஆகியோர் நடிப்பில் இப்படம், விமர்சன ரீதியாக நல்ல வெற்றியை பெற்றிருந்தது. முதல் படத்திற்கு பிறகு, நடிகர் பிரேம்ஜியை வைத்து சத்திய சோதனை என்ற படத்தை இயக்கியிருந்தார். காமெடி ஜானரில் எடுக்கப்பட்ட இப்படமும், நல்ல வெற்றியை பெற்று தந்தது. இதனை தொடர்ந்து, இயக்குநர் சுரேஷ் சங்கையா, அடுத்து யோகி பாபுவை வைத்து, ‘கெனத்தை காணோம்’ படத்தை இயக்கி வந்தார். இந்த படம், விரைவில் ரிலீஸுக்கு தயார் நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனயில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் சங்கையா, சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். இவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.