×

தமிழ் மொழிக்கு சிம்மாசனம் போட்டிருக்கும் பராசக்தி -விமர்சனம் 

 
புறநானூறு என்ற மாணவர்களின் புரட்சிப்படை, தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராக ரயிலை எரிக்கிறது. அப்போது காவல்துறை உயரதிகாரி ரவி மோகனுக்கும், போராளி சிவகார்த்திகேயனுக்கும் நடக்கும் மோதலில் ஒரு மாணவர் பலியாகிறார். எனவே, போராட வேண்டாம் என்று முடிவு செய்யும் சிவகார்த்திகேயன், ரயிலில் நிலக்கரி அள்ளும் பணியில் ஈடுபடுகிறார்.
அந்த போராட்டத்தை விபத்து என்று சொல்ல வேண்டும், இனி மொழி பிரச்னை ஏற்படாது என்று பிரதமர் உறுதி அளிக்கிறார். பிறகு அவரது மகள் ஆட்சியில் தமிழ்நாட்டில் மீண்டும் இந்தி திணிக்கப்படுகிறது. அன்றைய சென்னை மாநில முதலமைச்சர் அதற்கு ஆதரவாக செயல்படுகிறார். இந்தி தெரியாததால் சிவகார்த்திகேயனுக்கு வேலை கிடைக்கவில்லை.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் தம்பி அதர்வா முரளியும், மாணவர்களும் திரண்டு, இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தீவிரப்படுத்துகின்றனர். அப்போது எதிர்பாராத சம்பவம் நடக்கிறது. இதனால் பாதிக்கப்படும் சிவகார்த்திகேயன், மீண்டும் புறநானூறு படைக்கு தலைமை தாங்கி போராடுகிறார். இந்தியை திணிக்க தீவிரமாக முயற்சிக்கும் அரசை அவர்கள் என்ன செய்தார்கள் என்பது மீதி கதை.
1965களில் சென்னை மாநிலத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக போராடிய மாணவர்களின் எழுச்சியை சிறப்பாக ஆவணப்படுத்தி இருக்கிறது படம். துணிச்சலான போராளியாகவும், பாசமுள்ள அண்ணனாகவும் செழியன் கேரக்டரில் சிவகார்த்திகேயன் சிறப்பாக நடித்துள்ளார். அவரது 25வது படம் என்பதால், நடிப்பில் தனி முத்திரையை பதித்துள்ளார். தெலுங்கு பெண் ரத்னமாலாவாகவே வாழ்ந்துள்ள ஸ்ரீலீலா, கிளைமாக்ஸில் ரேடியோ மூலம் தகவல் சொல்லும் காட்சியில் சிறப்பாக நடித்துள்ளார்.ஒரு மாநிலத்தின் உயிர்மூச்சே அதனுடைய தாய்மொழிதான் என்று அழுத்தமாக சொல்லி, தமிழ் மொழிக்கு சிம்மாசனம் போட்டிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுகள்