பராசக்தி தலைப்பு விவகாரம்: சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக முடிவு
பராசக்தி தலைப்பு விவகாரத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனி நடிப்பில் அருண் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படத்திற்கு தமிழில் சக்தித் திருமகன் என்றும் மற்ற மொழிகளில் பராஷக்தி(PARASHAKTHI) என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக நேற்று காலை அறிவிக்கப்பட்டது.
பின்பு மாலை சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வந்த படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது. தமிழ் மற்றும் தெலுங்கில் இரண்டிலுமே இப்படத்திற்கு பராசக்தி(PARASAKTHI) எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. விஜய் ஆண்டனி மற்றும் சிவகார்த்திகேயன் இருவருக்குமே அவர்களது 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து விஜய் ஆண்டனி தெலுங்கில் பராஷக்தி(PARASHAKTHI) என்ற தலைப்பை கடந்த ஆண்டே தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி அதன் சான்றிதழை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் விஜய் ஆண்டனி தயாரிக்கவும் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு சிவகார்த்திகேயன் பட தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலும் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலும் பராசக்தி என்ற தலைப்பை பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி அதன் சான்றிதழை அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.