திரைப்படங்களை திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்வது உள்ளத்தை சிதைக்கிறது : நடிகர் சூரி வேதனை
திரைப்படங்களை திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்வது உள்ளத்தை சிதைக்கிறது என நடிகர் சூரி வேதனை தெரிவித்துள்ளார்.
நடிகர் சூரியின் நடிப்பில் அண்மையில் வெளியான படம் மாமன். தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் படத்தை திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்து பார்க்க வேண்டாம் எனவும், நாம் ஒவ்வொருவரும் மாற்றத்திற்கான பொறுப்புடன் செயல்பட்டால் திரையுலகம் இன்னும் உயரலாம் என நடிகர் சூரி கூறியுள்ளார்.
ஒரு படம் வென்றாலும், தோற்றாலும்... அது ஒரு பயணம். அந்த பயணத்தில் வலிகள், மகிழ்ச்சிகள், நம்பிக்கைகள் அனைத்தும் கலந்து இருக்கின்றன. இவ்வளவு முயற்சிக்குப் பிறகு, சிலர் இணையத்தில் திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்து பார்த்துவிட்டு, அதை பெருமையாக பகிரும் போது, அது நம் உள்ளத்தை சிதைக்கிறது. அந்த ஒரு 'வியூ'க்காக, யாரோ ஒருவரின் வருடங்கள் கொண்ட உழைப்பைக் கலைத்து விடுகிறோம்.
திரைப்படங்கள் மக்களை மகிழ்விப்பதற்காக மட்டுமல்ல, சில நேரங்களில் சமூகத்தில் முக்கியமான கருத்துக்களை எடுத்துரைக்கும் வழிமுறையாகவும் உருவாகின்றன. சில படம் யாரோ ஒருவரின் வாழ்க்கையின் பிரதிபலிப்பு. இத்தனை தன்னலமில்லாத உழைப்பை மதிக்காமல், திருட்டுப் பதிவிறக்கம் செய்வது சட்டவிரோதம் மட்டுமல்ல; மனிதநேயத்தையும் கைவிடும் செயல்.
எனவே என் பணிவான வேண்டுகோள்: திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள். திரைப்படங்களைச் சரியான வழியில் பார்த்து, அதை உருவாக்கியவர்களின் உழைப்புக்கு மரியாதை கொடுங்கள். உங்கள் ஆதரவு தான் ஒரு படைப்பாளிக்கு மிகப்பெரிய விருது. நாம் ஒவ்வொருவரும் மாற்றத்திற்கான பொறுப்புடன் செயல்பட்டால், திரையுலகம் இன்னும் உயரலாம்." என கூறியுள்ளார்.