நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் குறித்து தொலைபேசியில் கேட்டறிந்தார் பிரதமர் மோடி!
நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நலம் குறித்து பிரதமர் மோடி, லதா ரஜினிகாந்திடம் விசாரித்துள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ரஜினிகாந்த், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று முன்தினம்(செப் 30) இரவு அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் வயிறு தொடர்பான பிரச்சனை காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ரஜினிகாந்த் கூலி படத்தில் நடித்து வரும் நிலையில், ஏற்கனவே திட்டமிடப்பட்ட மருத்துவ பரிசோதனைக்காக ரஜினிகாந்த் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து ரஜினிகாந்த் விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, அன்புமணி ராமதாஸ், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
மேலும் ரசிகர்களும் ரஜினிகாந்த் உடல்நலம் பெற வேண்டும் என வேண்டி வருகின்றனர். இதனிடையே ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், "ரஜினிகாந்த் நேற்று (செப்.30) கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு இதயத்தில் (aorta) இருந்து வெளியேறும் ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த வீக்கத்தை மருத்துவர் சாய் சதீஷ் அறுவை சிகிச்சை இல்லாத (transcatheter) stent முறையில் சரி செய்துள்ளார். ரஜினிகாந்தின் நலம் விரும்பிகளுக்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள சிகிச்சையை தெரியப்படுத்த விரும்புகிறோம். ரஜினிகாந்த் தற்போது நன்றாக இருக்கிறார். அவர் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமர் நரேந்திர மோடி நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். பிரதமர் மோடியிடம், லதா ரஜினிகாந்த் தொலைபேசியில் ரஜினிகாந்த் சிகிச்சைக்கு பிறகு நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என தெரிவித்துள்ளார்” என பதிவிட்டுள்ளார்.