×

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய பிரபல நடிகை...!
 

 

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து  நடிகை வினோதினி விலகியதாக அறிவித்துள்ளார்.

தமிழில் துணை நடிகையாக வலம் வருபவர் வினோதினி. 'எங்கேயும் எப்போதும்' படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். பின்பு வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஆண்டவன் கட்டளை, கோமாளி, சூரரைப் போற்று உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக அரசியல் தொடர்பான தனது கருத்தைப் பகிர்ந்து வருவார். அதில் 2022ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இவர் விமர்சித்த வீடியோ வைரலானது. இதையடுத்து கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் கமலின் மக்கள் நீதி மய்யத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். பின்பு அக்கட்சியிலே பயணித்து வந்தார். 

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட அவர், “மய்யத்திலிருந்து மிகுந்த வருத்தத்துடன் வெளியேறுகிறேன். அரசியல் பெரிய கடல். அதில் முத்தெடுத்து, மக்களுக்குச் சேர்க்க, தனிப்பட்ட நபரால் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் செய்ய தேவை - எண்ணம், சிந்தனை, செயல், பணம். என்னிடம் எண்ணமும் சிந்தனையும் மட்டுமே உள்ளது என்பதைக் காலம் புரியவைத்திருக்கிறது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என் செயலும் பணமும் எனது சொந்த வாழ்க்கைத் தரத்தை ஓரளவு முன்னேற்றுவதற்கும், நான் மேற்கொண்டுள்ள தெருவிலங்குகளின் (நாய், பூனை, ஒரு கோஷாலாவில் என் செலவில் வாழும் சில மாடுகள்) வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுவதற்குமே சென்றிருக்கிறது. ஹிந்தியில் ஒரு வார்த்தை இருக்கிறது. அதை நான் சொல்லிப் பல பேரைத் திட்டியிருக்கிறேன். காம்சோர் என்பதுதான் அந்த வார்த்தை. ஆங்கிலத்தில் சொன்னால் Slacker. கடமைகளைத்தட்டிக்கழிக்கும் சோம்பேறி. மய்யத்தில் நான் செய்தது காம்சோர். இதை ஒத்துக்கொள்வதில் தவறில்லை என்றும் இந்த உண்மையை வெளிப்படுத்துவதன் மூலம் எனக்கு மிகப்பெரிய சுதந்திரம் கிடைக்கிறது என்றும் நம்புகிறேன்.

கட்சி எடுத்த பல நிலைப்பாடுகளைக் கேள்வி கேட்டிருக்கிறேன். பெருந்தன்மையோடு எனக்கு புரிய வைத்திருக்கின்றனர். யாருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்புக்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன. தலைவரோடு நேரடியாக உரையாட, கேள்வி கேட்க, பற்பல நிகழ்ச்சிகளைத் துவக்க, பற்பல செயல்பாடுகளை முன்னெடுக்க. ஆனால் அவற்றையெல்லாம் நான் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. நம்மவர் போன்ற மகத்தான தலைவனைத் தவறவிட்டது தமிழ்நாடு மட்டுமல்ல, வினோதினியும்தான். தொடர்ந்து என் எண்ணமும் சிந்தனையும் தமிழ்நாட்டு அரசியலை மையப்படுத்தியே இருக்கும். ஏனெனில், நான் பிறந்த இம்மண்ணுக்கு என் மக்களுக்கு என்னால் ஆன சிறு மாற்றத்தையாவது, குறைந்தபட்சம் சிந்தனையளிவிலாவது, இப்பிறவியில் கொண்டுவர வேண்டும் என்பதுதான் என் நோக்கம்.

65 வயதிற்கு மேலும் தனது மூத்திரப்பையை கையில் ஏந்தி பகுத்தறிவு புகட்டிய அந்த தாத்தனைப்போல், இன்றும் எங்கள் மய்யத்தில் கொடி நட்டு, போஸ்டரடித்து, உறுப்பினர் சேர்த்து, ஒவ்வொரு தேர்தலின்போதும் அயராது களத்தில் இறங்கி வேலைசெய்யும் தொண்டனைப்போல், மக்கள் பிரச்சனை என்றால் களத்தில் குதிக்கும் ஒவ்வொரு கட்சியின் நிர்வாகிபோல் நானும் என் கணக்கைத் தொடங்கும் பொழுதுதான் அது அரசியல் அல்லாது, அறச் செயலாக மாறும். அதுவரை, சிந்தனையில் மட்டுமே. அச்சிந்தனையை மெருகேற்றிய நம்மவருக்கும் அவர்பின் நின்ற, நிற்கும் அனைவருக்கும் நன்றிகளும் அன்பும். தொடர்ந்து பயணிப்போம். சமரசமற்ற நடுவு நிலையிலிருந்தபடியே” என்றார்.