பிரதீப் ரங்கநாதன் படத்திற்கு இசையமைக்கும் இளம் இசையமைப்பாளர்...!

பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, பின் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். அதைத்தொடர்ந்து அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த படம் ‘டிராகன்’. ஏ.ஜி.எஸ். தயாரித்திருக்கும் இப்படத்தில் கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த மாதம் 21ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் ரூ.100 கோடியை கடந்தது.
தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'எல்.ஐ.கே' படத்தில் நடித்து முடித்துள்ள பிரதீப் ரங்கநாதன், இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடிக்கிறார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கு இசையமைக்க இன்றைய சென்சேஷன் சாய் அபயங்கர் இணைந்துள்ளார் என கூறப்படுகிறது.