×

நவ்யா நாயரின் செயலுக்கு குவியும் பாராட்டு

 

மலையாள திரையுலகில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் நடிகை நவ்யா நாயர். மேலும் தமிழ் மற்றும் கன்னட மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் பிரசன்னா நடிப்பில் வெளியான 'அழகிய தீயே', சேரனின் 'மாயக்கண்ணாடி', முன்னாள் முதல்வர் கலைஞர் எழுதிய 'பாசக்கிளிகள்' உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானார். இப்போது மலையாளத்தில் மற்றும் கன்னட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். 

இந்த நிலையில் நவ்யா நாயரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கேரளா ஆலப்புழா மாவட்டத்தில் பட்டணங்காடு பகுதியை சேர்ந்த ரமேசன் என்பவர், சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவர் மீது லாரி மோதியுள்ளது. மேலும் நிற்காமல் சென்றுள்ளது. இதை ரமேசனின் பின்னால் தனது காரில் வந்த நவ்யா நாயர் கவனித்து, அந்த லாரியை பின் தொடர்ந்துள்ளார். பின்பு லாரியை நிற்கவைப்பதற்காக முயற்சித்தார். ஆனால் லாரி நிற்காமல் சென்று கொண்டிருந்ததால், நீண்ட நேரம் பின்தொடர்ந்து ஒரு வழியாக லாரியை நிறுத்தினார். 

பின்பு சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் லாரி ஓடுநரை கைது செய்தனர். இதனிடையே லாரி மோதியதில் படுகாயமடைந்த ரமேசன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரியை தைரியமாக காரில் பின் தொடர்ந்து மடக்கிப் பிடித்த நவ்யா நாயரை பலரும் பாராட்டி வருகின்றனர்.