×

பிரியங்கா சோப்ரா ஒரு ரோல் மாடல்:  சமந்தா புகழாரம் 

 

நடிகை சமந்தா, பாலிவுட் நடிகர் வருண் தவணுடன் நடித்துள்ள ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ வெப் தொடர் பிரைம் வீடியோவில் வெளியாகி இருக்கிறது. இதில் ஹீரோவுக்கு இணையாக சமந்தாவும் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்துள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சமந்தா, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது: நான் நடிக்கும் கதாபாத்திரங்களை மிகவும் பொறுப்புடன் தான் தேர்வு செய்கிறேன். இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு நியாயமான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்று உணர்கிறேன். திரைப்படங்களில் பெண் கதாபாத்திரங்களை ஆண்கள்தான் முடிவு செய்கிறார்கள். அதனால் அது நிச்சயம் பெண்களின் பயணமாக இருக்காது. இது அவர்களின் பலமாகவோ பலவீனமாகவோ இருக்காது.

இனி, பெண்களை நியாயமான முறையில் பிரதிநிதித்துவப்படுத்தும் பாத்திரங்களையே தேர்வு செய்ய இருக்கிறேன். சிட்டாடல் வெப் தொடரில் நாயகனுக்கு இணையான வேடம் எனக்கும் கொடுக்கப் பட்டுள்ளது. ஒரு நாயகன் செய்வதை நாயகியும் செய்யலாம் என்பதை இந்த வெப் தொடர் நிரூபித்துள்ளது. அதனால், பெண்களைப் பொம்மையாகக் காட்டும் கதாபாத்திரங்களில் இருந்து ஒதுங்கி இருக்க முடிவு செய்திருக்கிறேன்.

நடிகை பிரியங்கா சோப்ரா, பெண்களுக்குச் சிறந்த முன் மாதிரியாக இருக்கிறார். பெரிதாக யோசிக்க அவர்தான் கற்றுக்கொடுக்கிறார். இவர்களைப் போன்றவர்கள் அதிகார மையங்களில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு சமந்தா கூறினார்.