‘பென்ஸ்’ படத்தில் ராகவா லாரன்ஸுக்கு நாயகியாகும் பிரியங்கா மோகன்
‘பென்ஸ்’ திரைப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸுக்கு நாயகியாக பிரியங்கா மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘ரெமோ’ மற்றும் ‘சுல்தான்’ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் ‘பென்ஸ்’. இதனை லோகேஷ் கனகராஜ், பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் ஆகியோர் இணைந்து தயாரிக்கவுள்ளனர். இதில் நாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படம் அறிவிக்கப்பட்டாலும் எப்போது படப்பிடிப்பு என்பது தெரியாமல் உள்ளது.
தற்போது இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.மேலும், ‘பென்ஸ்’ படத்தினை ‘எல்சியூ’ வரிசையில் இணைக்கவும் திட்டமிட்டு இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அதற்கு ஏற்ற வகையில் கதையில் மாற்றங்கள் செய்து இறுதி வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை ‘எல்சியூ’ வரிசையில் ‘கைதி’, ‘விக்ரம்’, ‘லியோ’ உள்ளிட்ட படங்கள் வெளியாகி இருக்கிறது. ‘எல்சியூ’ படங்களின் முடிவாக ‘விக்ரம் 2’ இருக்கும் என்று லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.