×

உதயநிதி தொடர்பான கேள்வி.. கோபமாக பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த்..

 

நடிகர் ரஜினிகாந்திடம் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் விவகாரம் குறித்து கருத்து கேட்டதற்கு, அரசியல் கேள்விகள் என்னிடம் கேட்காதீர்கள் என ஆவேசமாக பதில் அளித்தார்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த் சில தினங்களுக்கு முன்பு சென்னையிலிருந்து விமானம் மூலம் விசாகப்பட்டினம் சென்றிருந்தார். இந்நிலையில் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது. மேலும், வேட்டையன் படத்தின் இரண்டாவது சிங்கிள் 'hunter vantaar' பாடல் வெளியாகியுள்ளது.

வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக விசாகபட்டினத்திலிருந்து ரஜினிகாந்த், இன்று விமான மூலம் சென்னை வந்தடைந்தார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், "வேட்டையன் படம் நன்றாக வந்துள்ளது. அதேபோல் கூலி படப்பிடிப்பும் --நன்றாக நடந்து கொண்டிருக்கிறது" என்று கூறினார். மேலும், மனசிலாயோ பாடலை AI தொழில்நுட்பம் மூலம் மலேசியா வாசுதேவன் பாடியுள்ளது குறித்து கேட்டதற்கு, "மலேசியா வாசுதேவன் குரலை AI மூலம் கொண்டு வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார். அதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "அரசியல் கேள்விகள் என்னிடம் கேட்காதீர்கள்" என கடும் கோபமாக பதில் அளித்தார்.

கடந்த மாதம் நடைபெற்ற 'கலைஞர் எனும் தாய்' புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், மூத்த அமைச்சர்களை சமாளிப்பது மிகவும் கடினம் என அமைச்சர் துரைமுருகன் குறித்து நகைச்சுவையாக கூறினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், பல்லு போன நடிகர்களால் இளைஞர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என கூறினார். இந்த உரையாடல் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.