×

‘உங்களுக்கு பவர்ஃபுல்லான கண்கள் இருக்கு’ -ரஜினி பாராட்டிய நடிகை யார் தெரியுமா ?

 

சன் பிக்சர்ஸ் பிரமாண்ட தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர் 2’. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா மேனன் உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். வரும் அக்டோபர் 15ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் முதல் சிங்கிளான ‘அல போலேலோ’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது.

அதில் நடிகை பூர்ணாவின் நடனம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இது குறித்து பூர்ணா பேசுகையில், ‘ரஜினிகாந்துடன் சேர்ந்து திரையில் வந்ததை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. சூப்பர் ஸ்டாருடன் திரையை பகிர்வேன் என்பது நான் கனவில் கூட நினைத்து பார்க்காத ஒன்று. இப்பாடலுக்கு ரசிகர்கள் தரும் வரவேற்பை பார்த்து அதிக மகிழ்ச்சியில் இருக்கிறேன். இது போன்ற ஒரு பெரிய படத்தில் ஒரு பாடலுக்கு ஆட வேண்டும் என்றால் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும். இந்தப் பாடல் முழுவதும் நான் ஆடி இருக்கிறேன்.

பாடல் எடிட்டிங் முடிந்த பிறகு படக்குழுவை சேர்ந்த பலர் என்னை பாராட்டினார்கள். நானும் உங்களை போல பாடல் யூடியூபில் வெளியான பிறகுதான் பார்த்தேன். பாடலுக்கு கிடைக்கும் வரவேற்பு என்னை திகைக்க வைக்கிறது. படப்பிடிப்பு நேரத்தில் ரஜினிகாந்த் என்னிடம், ‘உங்களுக்கு பவர்ஃபுல்லான கண்கள் இருக்கு’ என்று சொன்னார். ஒரு பவர்ஃபுல்லான மனிதரிடமிருந்து கிடைத்த அந்த வார்த்தைகள் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த சிறந்த பரிசாக கருதுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.