×

ரிலீசுக்கு தயாராகும் ‘ஜெயிலர்’.. அந்த பண்டிகையை டாக்கெட் செய்யும் படக்குழு !

 
 நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வருகிறது ‘ஜெயிலர்’. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில் உள்ளிட்ட பல மொழி நட்சத்திரங்களும் நடிக்கின்றனர். அதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டே இருக்கிறது.

இந்த படத்தில் ஓய்வுபெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரம் குறித்த அப்டேட்டுகள் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடிகர் ரஜினிகாந்த் நிறைவு செய்தார். இதையடுத்து சில காட்சிகளின் படப்பிடிப்பு மட்டும் தற்போது நடைபெற்று வருகிறது. அதேநேரம் இந்த படத்தின் தயாரிப்பு பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தை வரும் செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தியையொட்டி வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.