×

அன்பை பரிமாறிக் கொள்ளும் ரஜினி - அமிதாப் பச்சன்

 

ரஜினிகாந்த் நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் டைட்டில் டீசர் கடந்தாண்டு ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் வெளியாகி கவனம் பெற்றதையடுத்து படத்திலிருந்து ‘மனசிலாயோ...’ பாடல் சமீபத்தில் வெளியாகி ஹிட் ஆனது. இதனிடையே படத்தின் டப்பிங் பணிகளை மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரஜினிகாந்த் ஆகியோர் தொடங்கியிருந்தனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா 20.09.2024 சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இதில் ‘ஹே சூப்பர் ஸ்டாருடா ஹண்டர் வண்டாற் சூடுடா...’ என்ற பாடல் வெளியிடவுள்ளதாக அனிருத் தெரிவித்தார்.  

null


இப்படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை தொடர்ந்து வெளியிட்டு வரும் படக்குழு, இதுவரை ரூபா என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் ரித்திகா சிங்கும் சரண்யா என்ற கதாபாத்திரத்தில் துஷாரா விஜயனும், தாரா என்ற கதாபாத்திரத்தில் மஞ்சு வாரியரும் நடித்துள்ளதாக அறிவித்திருந்தது. இதை தொடர்ந்து ராணா டகுபதி நட்ராஜ் என்ற கதாபாத்திரத்திலும் ஃபகத் ஃபாசில் பேட்ரிக்(Patrick) என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாக வீடியோ வெளியானது.   

இந்த நிலையில் அமிதாப் பச்சனின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது. அவர் சத்யதேவ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படப்பிடிப்பு தளத்தில் அவர் நடித்த காட்சிகளை எடிட் செய்து சிறிய வீடியோவாகவும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ரஜினியும் அமிதாப் பச்சனும் கட்டிபிடித்துக் கொண்டு அன்பை பரிமாறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இப்படம் மூலம் 33 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியும் அமிதாப்பும் இணைந்து நடித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு 1991 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான 'ஹம்' படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.