டெல்லி கணேஷ் மறைவு - நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
Nov 10, 2024, 15:45 IST
பிரபல நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 80 வயதான நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு உயிரிழந்தார். டெல்லி கணேஷின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.டெல்லி கணேஷின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலர் நேரிலும், சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், "என்னுடைய நண்பர் டெல்லி கணேஷ் அருமையானதொரு மனிதர். அற்புதமான நடிகர். அவருடைய மறைவு செய்தி கேட்டு நான் மனம் வருந்துகிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி," என குறிப்பிட்டுள்ளார்.