“என்னுடைய நீண்ட கால நண்பர்” - ரஜினி இரங்கல்
முன்னாள் முதல்வர் கலைஞரின் மருமகனும், முரசொலி பத்திரிக்கையின் ஆசிரியருமாக இருந்த முரசொலி செல்வம் (82) மாரடைப்பால் இறந்துள்ளார். கலைஞரின் மகள் செல்வியின் கணவரான செல்வம், முரசொலி மாறனின் சகோதரரும் ஆவார். தி.மு.க.வின் முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியராக இருந்த அவர், 50 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி முரசொலி நாளிதழை மேம்படுத்தியவர். முரசொலி செல்வத்துடைய மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், “நான் சாய்வதற்கு கிடைத்த கடைசி தோளை, கொள்கை தூணை இழந்து நிற்கிறேன். செல்வம் மாரடைப்பால் மரணம் அடைந்த செய்தி கேட்டு இதயம் அதிர்ந்து நொறுங்கி விட்டேன்” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதே போல் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கவிஞர் வைரமுத்து என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் முரசொலி செல்வம் மறைவுக்கு தனது எக்ஸ் பக்கத்தின் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “முரசொலி செல்வம் என்னுடைய நீண்ட கால நண்பர். அருமையான மனிதர். அவருடைய மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.