×

ராம நாராயணனின் சினிமாட்டிக் யுனிவர்ஸ்.. மீண்டும் உருவாகும் ஆடி வெள்ளி திரைப்படம்...!

 

ஹாலிவுட் திரைப்படங்கள் போலவே தமிழ் உள்பட இந்திய மொழிகளிலும் சினிமாட்டிக் யுனிவர்ஸ் திரைப்படங்கள் உருவாகி வருகின்றன என்பதும் குறிப்பாக தமிழ் திரை உலகில் இதனை லோகேஷ் கனகராஜ் ஆரம்பித்து வைத்ததை அடுத்து எல்.சி.யூ படங்கள் உருவாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.அந்த வகையில் பழம்பெரும் இயக்குனர் ராம நாராயணன் அவர்கள் இயக்கத்தில் உருவான ’ஆடி வெள்ளி’ என்ற திரைப்படம் மீண்டும் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.தீய சக்தி எழும்போது தெய்வீக சக்தி விழித்து கொள்கிறது என்ற கேப்ஷன் உடன் உருவாக இருக்கும் ’ஆடிவெள்ளி’ திரைப்படத்தின் வீடியோ சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


ராமநாராயணன் மகனும் பிரபல தயாரிப்பாளருமான முரளி ராமசாமி தனது தேனாண்டாள் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை பிவி தரணிதரன் இயக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே ’பர்மா’ ’ஜாக்சன் துரை’ ‘ராஜா ரங்குஸ்கி’ ’ரேஞ்சர்’ ’ஜாக்சன் துரை 2’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ராம நாராயணன் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற அறிவிப்புடன் வெளியாகி உள்ள இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்திய படமாக உருவாகவுள்ளது.