×

கார் மோதி ஒருவர் பலியான விவகாரம் - ரேகா நாயர் விளக்கம்
 

 

சென்னை ஜாபர்கான்பேட்டையில் மஞ்சன் என்பவர் சாலையோரப் பகுதியில் படுத்து உறங்கியிருக்கிறார். அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக சென்ற கார் ஒன்று அவர் மீது மோதியுள்ளது. இதையடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், கார் என்ணை வைத்து ஓட்டுநர் பாண்டி என்பவரை கைது செய்தனர். 

அவரிடம் நடத்திய விசாரணையில் பாண்டி, நடிகை ரேகா நாயரின் கார் ஓட்டுநர் என்பதும், நடிகை ரேகா நாயரின் பெயரில்தான் இந்த கார் இருந்ததும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை கிளப்ப,  ரேகா நாயர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், “காரை ஓட்டுநர் பாண்டி மெக்கானிக் கடையில் இருந்து வீட்டிற்கு கொண்டு வந்தார். காருக்கு முன்பு நான் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். விபத்து நிகழ்ந்து பொதுமக்கள் கூடியதால் அதை கண்டு இறங்கி பார்த்த போது தான், ஒருவர் படுகாயமடைந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது நான் தான்.

இறந்த நபர் மது போதையில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிசிடிவி-யை பார்த்தால் தான் எப்படி விழுந்தார் என்பது தெரிய வரும். நான் காரை ஓட்டவில்லை. ஓட்டுநர் தான் காரை ஓட்டினார். அதற்கான ஆதாரங்களை போலீசாரிடம் கொடுத்துள்ளேன்” என்றார்