×

அருண் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு  ‘ரெட்ட தல’ ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு!

 

அருண் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ரெட்ட தல படத்திலிருந்து ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகி உள்ளது. நடிகர் அருண் விஜய் கடைசியாக மிஷன் சாப்டர் 1 எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து பாலாவின் வணங்கான் திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார் அருண் விஜய். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் நடிகர் அருண் விஜய், மான் கராத்தே பட இயக்குனர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் ரெட்ட தல எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் அருண் விஜயுடன் இணைந்து சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன், பாலாஜி முருகதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்தை பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்க சாம் சிஎஸ் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்தது இந்த படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அருண் விஜயின் 47 வது பிறந்த நாளான இன்று (நவம்பர் 19) அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ரெட்ட தல படக்குழு ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் அருண் விஜய், வித்தியாசமான லுக்கில் ஸ்டைலிஷாக காண்பிக்கப்பட்டுள்ளார். இந்த போஸ்டர் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.