×

“ஜீரணிக்க முடியவில்லை; சைந்தவி திரும்ப வீட்டுக்கு வரவேண்டும்” - ஏ.ஆர்.ரைஹானா உருக்கம்

 

 “சைந்தவி திரும்ப வீட்டுக்கு வரவேண்டும் என்று உண்மையிலேயே நான் விரும்புகிறேன். என் மகளை காட்டிலும் சைந்தவியிடம் நான் அதிகம் மனம் விட்டு பேசுவேன்” என்று இசையமைப்பாளரும் ஜி.வி.பிரகாஷின் தாயாருமான ஏ.ஆர்.ரைஹானா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: “ஜி.வி.பிரகாஷ்,சைந்தவி இருவருமே வாழ்க்கையில் இணைய வேண்டும் என்று அவர்கள்தான் முடிவு செய்தனர். இப்போது பிரிய வேண்டும் என்றும் அவர்கள்தான் முடிவு செய்தனர். அவர்கள் சேர்ந்து இருக்கும்போது என்னால் பிரிக்க முடியுமா? விதி என்று ஒன்று இருக்கிறது. இப்போது நான் போய் இருவரும் சேர வேண்டும் என்று சொன்னால் சேரப் போகிறார்களா? சைந்தவி ஒரு அற்புதமான பெண். என் மகனும் நிறைய விஷயங்களில் அட்ஜஸ்ட் செய்தார். ஆனால் இந்த விஷயங்கள் எல்லாம் ஏன் நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. இது இறைவனால் ஏற்படுத்தப்பட்டதா என்றும் தெரியவில்லை.

ஆனால் சைந்தவி திரும்ப வீட்டுக்கு வரவேண்டும் என்று உண்மையிலேயே நான் விரும்புகிறேன். என் மகளை காட்டிலும் சைந்தவியிடம் நான் அதிகம் மனம் விட்டு பேசுவேன். இப்போதும் கூட என்னால் அவரிடம் எதுவும் பேசமுடியும். எதுவும் கேட்கமுடியும். அவர் ஒரு அருமையான பெண். என் மகனிடம் இதுகுறித்து நான் பேசினேன். விவாகரத்துக்கு அவர் கூறிய காரணத்தை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இதை நான் இறைவனிடமே விட்டுவிட்டேன். அவர்கள் இருவரும் சேரவேண்டும் என்று அவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்” இவ்வாறு ரைஹானா தெரிவித்தார்.

இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது பள்ளித் தோழி சைந்தவியை காதலித்து வந்தார். கடந்த 2013-ம் ஆண்டு இவர்கள் திருமணம் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவர்களுக்கு 4 வயதில் அன்வி என்ற மகள் இருக்கிறார். ஜி.வி.பிரகாஷுக்கும் சைந்தவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து இருவரும் பிரிவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர்.