×

சர்ச்சையை கிளப்பியுள்ள சமந்தாவின் இன்ஸ்டா பதிவு..!

 

நடிகை சமந்தா, தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக இருக்கிறார். மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட அவர், சில வருட சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார். இப்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து ஃபிட்னஸ் தொடர்பான பல்வேறு பதிவுகளை பகிர்ந்து வரும் சமந்தா அண்மையில், தனது ஸ்டோரி பகுதியில், ‘நெபுலைசர்’ கருவியை தனது மூக்கில் வைத்தவாறு ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அத்துடன், “ஒரு பொதுவான வைரலுக்கு மருந்து எடுத்துக் கொள்ளும் முன், ஒரு மாற்றுவழியை முயற்சி செய்து பாருங்கள். அதில் ஒரு வழி, ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் காய்ச்சி வடிகட்டிய நீர் ஆகியவற்றின் கலவையுடன் நெபுலைஸ் செய்வது” என்று குறிப்பிட்டிருந்தார்.

சமந்தாவின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. எக்ஸ் தளத்தில் லிவர் டாக் என்ற பெயர் கொண்ட மருத்துவர் ஒருவர் சமந்தாவின் பதிவை பகிர்ந்து கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து அவர் தனது பதிவில் கூறியுள்ளதாவது:-

துரதிர்ஷ்டவசமாக, உடல்நலம் மற்றும் அறிவியல் குறித்த அறிவில்லாத, செல்வாக்கு மிக்க இந்திய நடிகையான சமந்தா ரூத்பிரபு, சுவாச வைரஸ் தொற்றுகளைத் தடுக்கவும், சிகிச்சையளிக்கவும் ஹைட்ரஜன் பெராக்சைடை சுவாசிக்கும்படி அவரை பின்தொடரும் லட்சக்கணக்கான மக்களுக்கு அறிவுறுத்துகிறார்.
அமெரிக்காவின் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி அறக்கட்டளை நிறுவனம் ஹைட்ரஜன் பெராக்சைடை நெபுலைஸ் செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கிறது. ஏனெனில் அது உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது.

பகுத்தறிவு மற்றும் விஞ்ஞான ரீதியான ஒரு முற்போக்கான சமூகத்தில், பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் இந்த பெண்ணுக்கு அபராதமோ அல்லது சிறை தண்டனையோ விதிக்கப்படும். அவருக்கு உதவியோ அல்லது அவரது குழுவில் சிறந்த ஆலோசகரோ தேவை. இந்தியாவின் சுகாதார அமைச்சகம் அல்லது ஏதேனும் சுகாதார ஒழுங்குமுறை அமைப்பு இது போன்ற பிரபலங்கள் பொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிப்பது குறித்து ஏதேனும் செய்வார்களா? அல்லது முதுகெலும்பில்லாமல் மக்களை இறக்க விடுவார்களா?. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவைத் தொடர்ந்து பலரும் சமந்தாவின் பதிவுக்கு கடுமையான முறையில் எதிர்வினையாற்றி வருகின்றனர்.