×

நடிகைகளுக்கு மட்டுமல்ல நடிகர்களுக்கும் பாலியல் தொல்லை - சனம் ஷெட்டி

 

தமிழ் திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாகவும், நடிகைகள் மட்டுமல்ல நடிகர்களும் பாலியல் தொல்லைக்கு உள்ளாவதாகவும் நடிகை சனம் ஷெட்டி கூறியுள்ளது சினிமா வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது..

மலையாள திரையுலகில் மட்டுமல்ல தமிழ் திரையுலகிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக அதிர வைக்கும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் நடிகை சனம் ஷெட்டி. மலையாள திரையுலகில் பணியாற்றும் பெண்களின் நிலை குறித்து ஆய்வு செய்த ஹேமா கமிட்டி அறிக்கை பகீர் தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளது. பாலியல் உறவுக்கு சம்மதிக்கும்படி தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் நடிகைகளை கட்டாயப்படுத்துகின்றனர், பாலியல் ரீதியாக இணங்கும் நடிகைகளுக்கு மட்டுமே அதிக படவாய்ப்பு, அத்துமீறியவர்களின் பட்டியலில் முன்னணி நடிகர்கள் பலர் இருக்கிறார்கள் என்பன போன்ற அடுக்கடுக்கான அதிர்ச்சித் தகவல்கள் ஹேமா கமிட்டி அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

கேரளாவில் புயலைக் கிளப்பியுள்ள இந்த விவகாரம் தீவிரமாக பேசப்படும் நிலையில், தமிழ்நாட்டிலும் பரபரப்பை பற்ற வைத்துள்ளார் நடிகை சனம் ஷெட்டி. 12 ஆண்டுகளாக தென் இந்திய திரைப்படங்களில் நடித்து வந்தாலும், பெரிய படங்கள் கிடைக்காமல் இருந்த சனம் ஷெட்டி, தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தார். இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்குச் சென்ற நடிகை சனம் ஷெட்டி, பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கண்டித்து தனியார் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மலையாள திரையுலகைப் போல, தமிழ் திரையுலகிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். மேலும், தன்னுடைய திரைத்துறை அனுபவத்தையும் சனம் ஷெட்டி பகிர்ந்து கொண்டார். நடிகைகள் மட்டுமல்ல நடிகர்களும் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவதாகவும், இது அதிகாரத் திமிரால் நடப்பதாகவும் சனம் ஷெட்டி கொந்தளித்தார்.திரைமறைவில் நடக்கும் அத்துமீறல்களையும், குற்றங்களையும் தடுக்கவும், அதில் இருந்து தப்பிக்கவும், நடிகைகள் எதிர் குரல் எழுப்ப வேண்டும் எனவும் சனம் ஷெட்டி கேட்டுக்கொண்டார்.