பான் இந்தியா அளவில் வெளியாகும் சத்யராஜ் - ப்ரியா பவானி சங்கரின் ‘ஜீப்ரா’
பெண்குயின் இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ல ஜீப்ரா திரைப்படம் பான் இந்தியா அளவில் அக்டோபர் 31 அன்று வெளியாக உள்ளது. ஓல்ட் டவுன் பிக்சர்ஸ் மற்றும் பத்மஜா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜீப்ரா’. இவர் முன்னதாக பெண்குயின் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். பான் இந்தியா அளவில் உருவாகி உள்ள இப்படம், அக்டோபர் 31ஆம் தேதி பான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
இப்படம், அரசின் அதிகாரமிக்க உலகில் நிகழும் நிதிக்குற்றங்களை ஆராயும் கதைக்களத்துடன் அமைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. அதேநேரம், மூன்று வெவ்வேறு கதைகள் ஒன்றாக இணையும் இப்படத்தில், தென்னிந்திய திரைத்துறையின் மூன்று முக்கிய நட்சத்திரங்கள், ஒவ்வொரு கதையிலும் முதன்மைப் பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளனர்.
இதன்படி, தமிழில் சத்யராஜ், தெலுங்கு உலகின் சத்யதேவ், கன்னட சினிமாவின் தனஞ்சயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர்களுடன் பிரியா பவானி சங்கர், ஜெனிஃபர் பிசினாடோ, சுனில் வர்மா, சுரேஷ் மேனன் மற்றும் சத்யா அக்கலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும், சலார், கேஜிஎஃப் போன்ற பிரமாண்ட படங்களில் பணியாற்றிய இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.