×

 
“உண்மையான குருவை நீங்கள் தேடிப் போக தேவையில்லை” - செல்வராகவன்

 

தமிழில் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் எனப் பல்வேறு வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் செல்வராகவன். இதைத் தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்பு ஹீரோவாக சாணிக் காயிதம், பகாசுரன் உள்ளிட்ட படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ஃபர்ஹானா, மார்க் ஆண்டனி, ராயன் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  இந்தப் படங்களைத் தொடர்ந்து, தெலுங்கில் ரவி தேஜா - கோபிசந்த் மலினேனி கூட்டணியில் உருவாகும் புது படத்தில் நடிக்கிறார்.  

இதனிடையே தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் செல்வராகவன் அவ்வப்போது வாழ்க்கையின் தத்துவங்கள் குறித்தும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்கள் குறித்தும் பதிவிட்டு வருவார். அந்த வகையில் கடைசியாக ஆயிரத்தில் ஒருவன் படம் குறித்து உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். 

இந்த நிலையில் ஆன்மீகம் குறித்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், “யாரோ ஒருவர் எதையோ உளறிக்கொண்டு நான் ஆன்மிக குரு என்று பேசினால் நீங்களும் கண்ணை மூடிக்கொண்டு கேட்பீர்களா. உண்மையான குருவை நீங்கள் தேடிப் போக தேவையில்லை. அவரே உங்களை தேடி வருவார். உங்களுடைய சந்திப்பு தானாக நடக்கும். இதற்கு புத்தர் சொல்லும் தியானம் தான் ஈஸியான வழி. அதை செய்யும் போது எல்லாமே நடக்கும். தியானம் செய்யும் போது நிறைய விஷயங்கள் நினைவில் வந்து போகும். அதில் கவனம் செலுத்தாதீர்கள். அது வரும் பிறகு போய்விடும் நீச்சல் குளத்தில் நீச்சல் அடித்துக் கொண்டு இருந்தால் ஒரு நாள் நீச்சல் தானாகவே வந்துவிடும்” என்றார்.

சமீபத்தில் அரசு பள்ளி நிகழ்ச்சியில் மகாவிஷ்ணு என்பர் ஆன்மிகத்தை பற்றி சொற்பொழிவாற்றியிருந்தது பெரும் சர்ச்சையாகி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.