தனுஷின் 50வது படத்தில் செல்வராகவன்.. மீண்டும் இணையும் தனுஷ் - செல்வராகவன் கூட்டணி !
தனுஷ் இயக்கும் 50வது படத்தில் இயக்குனர் செல்வராகவன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘கேப்டன் மில்லர்’ படத்திற்கு பிறகு தனது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். இந்த படத்திற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கெட்டப்பை நடிகர் தனுஷ் மாற்றியிருந்தார். நீண்ட முடியுடன் இருந்த அவர், திருப்பதிக்கு சென்று மொட்டை போட்டு புதிய தோற்றத்திற்கு மாறினார்.
சமீபத்தில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியது. சென்னை ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் 500 வீடுகள் கொண்ட பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்ற வருகிறது. அதில் முக்கிய காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் தனுஷின் அண்ணனும், இயக்குனருமான செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே செல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை, மயக்கம் என்ன உள்ளிட்ட படங்களில் தனுஷ் நடித்துள்ளார். தற்போது தனுஷ் இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பது திரையுலகில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.