×

செல்வராகவன் - ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் உருவாகும்  'Mental மனதில்'! 

 

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து, நடிக்கும் 'Mental மனதில்' படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக அறியப்படுவர் இயக்குநர் செல்வராகவன். இவர் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழில் முதன்முதலில் அறிமுகமானார். இப்படத்திற்கு பின்னர், '7G ரெயின்போ காலனி', 'காதல் கொண்டேன்', 'புதுப்பேட்டை' , ஆயிரத்தில் ஒருவன் என இவர் இயக்கிய படங்கள் காலம் கடந்தும் தற்போது வரை பேசப்படுகிறது.

அதுமட்டுமின்றி இவர் படங்கள் தாண்டி, படங்களில் வரும் பின்னணி இசையையும் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்வர். குறிப்பாக, ’ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் தீம் மியூசிக் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தான். ஜி.வி. பிரகாஷ் குமார் - செல்வராகவன் கூட்டணி என்றாலே ரசிகர்கள் உற்சாகத்திற்கு சென்று விடுவர்.அந்த வகையில், 13 வருடங்களுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இயக்குநர் செல்வராகவன், ஜி.வி.பிரகாஷ் குமாரை வைத்து 'Mental மனதில்' என்ற படத்தை இயக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 

இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜிவி பிரகாஷ் குமார் கடைசியாக நடித்த ’செல்ஃபி’ (selfie) திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் இவர் இசையமைத்த கேப்டன் மில்லர், தங்கலான், அமரன் பட பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இறுதியாக, செல்வராகவன் - ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் ’மயக்கம் என்ன’ படம் வெளியானது.