×

'பிரிவு' என்ற முடிவையும் சமமாய் மதிக்க வேண்டும் : இயக்குனர் பார்த்திபன்
 

 

இசைப்புயல் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், சினிமாவில் பல சாதனைகளை படைத்துள்ளார். எத்தனையோ விருதுகளை பெற்று பெருமை சேர்ந்த ஏ.ஆர்.ரகுமான், ஆஸ்கார் விருது வென்று இந்தியர்களுக்கு பெருமை சேர்த்தார். ஏ.ஆர்.ரகுமானுக்கும், சாய்ரா பானுவுக்கும் 1995-ம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கதீஜா, ரஜீமா என்ற 2 மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர். சினிமா தாண்டி பொதுவெளியில் மிகவும் அன்பான தம்பதியாக ஏ.ஆர்.ரகுமான் - சாய்ரா பானு வலம் வந்தனர். இருவரும் ஒருவரையொருவர் எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காமல் காதலை பகிர்ந்து வந்தனர். இந்தநிலையில், ஏ.ஆர்.ரகுமானை விட்டு பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு நேற்று இரவு அறிவித்தார். இருவருக்கும் இடையே நிரப்ப முடியாத இடைவெளி ஏற்பட்டுள்ளதால் இந்த விவாகரத்து முடிவை எடுத்திருப்பதாகவும், ஏ.ஆர்.ரகுமானுடனான தனது திருமண பந்தத்தை முறித்து கொள்வதாகவும் சாய்ரா பானு அறிவித்தார்.

 

தனுஷ், ஜெயம் ரவி, ஜி.வி.பிரகாஷ் என நட்சத்திரங்களின் விவாகரத்து வரிசையில் தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த பிரிவு அறிவிப்பு நேற்று இந்திய சினிமாவிலேயே பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து முப்பது ஆண்டுகளை எட்டுவோம் என்று நம்பியிருந்த நிலையில், முடிவை எட்டியிருக்கிறது திருமண வாழ்க்கை என ஏ.ஆர்.ரகுமான் உருக்கமாக பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில், இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிரிவு: இசை ஸ்வரங்கள் பிரிவதால் தான் , பிறக்கும் ஒரு நாதமே… 'குடைக்குள் மழை' நானெழுதி கார்த்திக் ராஜா இசைக்க, இசையே பாடியது. பிரிவு என்பது துக்கம் மட்டுமல்ல , புதிய அமைதியாகவும் பிறக்கலாம். நெருக்கம் நிகழ்த்திய சொர்க்கத்தை விட, மூச்சு முட்டும் புழுக்கமாகவும் மாறியதை சற்றே மாற்றி, விலகி நின்று அவரவர் விருப்பம் போல வாழ இனி(ய) வழியுள்ளதா என சம்மந்தப் பட்டவர்கள் ஆராயலாம். ஊர் கூடி உறவை கொண்டாடி வழியனுப்புதல் போலே, ஊர் விலகி 'பிரிவு' என்ற முடிவையும் சமமாய் மதித்து அமைதிக்கு உதவிட வேண்டும்! என்று கூறியுள்ளார்.