×

பாலியல் துன்புறுத்தல் -விஷால் பட நடிகர் மீது வழக்குப்பதிவு 

 

மலையாளத் திரையுலகில் பாலியல் துன்புறுத்தல் பெண்களுக்கு தொடர்ந்து நடந்து வருவதாக சமீபத்தில் வெளியான ஹேமா கமிட்டி ஆய்வறிக்கை இந்தியத் திரையுலகை உலுக்கியுள்ளது.  
இதையடுத்து பாலியல் துன்புறுத்தல் குறித்து பல நடிகைகள் புகாரளிக்க, சம்பந்தப்பட்ட நடிகர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடிகை ஸ்ரீலேகா மித்ரா இயக்குநர் ரஞ்சித் மீதும் நடிகை ரேவதி சம்பத் நடிகர்கள் சித்திக் மற்றும் ரியாஸ் கான் மீதும் குற்றம் சாட்டினார். நடிகை மினுமுனீர் எம்.எல்.ஏ முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்ட 6 பேர் மீது குற்றம் சாட்டினார். குற்றம் சாட்டப்பட்ட ரஞ்சித், சித்திக், ரியாஸ் கான் ஆகியோர் குற்றத்தை மறுத்தனர். இதில் ரஞ்சித், சித்திக் தங்கள் வகிக்கும் திரைத்துறை தொடர்பான பதவிலிருந்தும் விலகியிருந்தனர். மேற்கண்ட நடிகர்கள் மீதும் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், எம்.எல்.ஏ முகேஷ் கேரள அரசின் குழுவில் இருந்து நீக்கப்பட்டார். 

இதனிடையே பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளில் நடிகர் சங்கத்தினர் சிக்கி வரும் நிலையில், அதற்கு தார்மீக பொறுப்பேற்று நடிகர் சங்கத் தலைவர் மோகன்லால் உட்பட 17 பேர் பதவி விலகியிருந்தனர். பாலியல் ரீதியான குற்றங்கள் தொடர்பாக கேரள அரசு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரித்து வரும் நிலையில், ராதிகா கேரவனில் ரகசிய கேமரா வைத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இது குறித்து ராதிகாவிடம் தொலைப்பேசி வாயிலாக விசாரணை மேற்கொண்டனர். ஹேமா விசாரணை குழு ஆய்வறிக்கையின் முழு வடிவத்தை வழங்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் சமீபத்தில் ஆணை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தற்போது நடிகர் பாபுராஜ் மீது துணை நடிகை ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக இடுக்கி அடிமாலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாபுராஜ் தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியான ஸ்கெட்ச் படத்திலும் விஷாலின்  ‘வீரமே வாகை சூடும்’ படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.