×

நடிகர் சித்திக் மீதான பாலியல் வழக்கு; உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 

மலையாளத் திரையுலகில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து ஆய்வறிக்கை வெளியிட்ட ஹேமா கமிஷன் அறிக்கை, இந்திய திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை பொதுவெளியில் பகிர்ந்தனர். அந்த வகையில் மலையாள நடிகை ஒருவர் மூத்த நடிகர் சித்திக் மீது பாலியல் புகார் முன்வைத்தார். அதாவது சித்திக் 2016ஆம் ஆண்டு மஸ்கட் விடுதியில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியிருந்தார். ஆனால் சித்திக் இந்த புகாரை மறுத்திருந்தார்.

இதையடுத்து அந்த நடிகையின் புகாரின் அடிப்படையில் கடந்த ஆகஸ்டில் சித்திக் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருந்து முன் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தார் சித்திக். அப்போது சித்திக்கை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். 

இந்த நிலையில் சித்திக்கின் முன் ஜாமீன் மனு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. புகார் கொடுத்திருந்த பெண், காவல்நிலையத்தை நாடுவதற்கு முன்பாக சமுக வலைத்தளங்களில் பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்திருந்ததை சுட்டிகாட்டிய உச்சநீதிமன்ற நீதிபதி, ‘சமுக வலைத்தளங்களில் கருத்து தெரிவிக்க தைரியம் இருக்கும் உங்களுக்கு, காவல் நிலையத்தில் புகார் அளிக்க தைரியம் இல்லையா?’ என்று சம்பந்தப்பட்ட பெண்ணிடம் கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட்ட சித்திக்கின் வழக்கறிஞர், ‘சித்திக்கின் இமேஜை அழிப்பதற்காகவே முறையான புகார் எதுவும் கொடுக்காமல் திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகிறார். அதனால், இந்த விவகாரத்தில் சித்திக்கிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்தார். 

இதனையடுத்து, சித்திக்கிற்கு பல்வேறு நிபந்தனைகள் விதித்து முன் ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். அதில், விசாரணை நீதிமன்றத்தில் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், விசாரணை அமைப்புகளுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதித்து ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.