×

“என் முடிவை புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்” - ஸ்ரேயா கோஷல் 

 

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்கள் பாடி இந்திய அளவில் பிரபலமானவர் ஸ்ரேயா கோஷல். இவர் குரலில் அண்மையில், யோகி பாபு மற்றும் லட்சுமி மேனன் ஆகியோர் நடிக்கும் ‘மலை’ படத்தில் இருந்து ‘கண்ணசர ஆராரோ...’ என்ற பாடல் டி.இமான் இசையில் வெளியானது. திரைப்படங்களில் பாடுவதோடு மட்டுமில்லாமல், கச்சேரியையும் நடத்தி வருகிறார். 

அந்த வகையில் சமீபத்தில் அவர் ‘ஸ்ரேயா கோஷல் லைவ், ஆல் ஹார்ட்ஸ் டூர்’ என்ற தலைப்பில் அமெரிக்காவில் டென்வர், சிகாகோ உள்ளிட்ட ஆறு இடங்களில் நடத்திய அவர், கடைசியாக டெல்லியில் கடந்த 10ஆம் தேதி இந்த கச்சேரியை நடத்தி முடித்திருந்தார். இதைத் தொடர்ந்து கொல்கத்தாவில் வருகிற செப்டம்பர் 14ஆம் தேதியும் துபாயில் செப்டம்பர் 21ஆம் தேதியும் நடைபெறவுள்ளதாக அறிவித்திருந்தார்.  

இந்நிலையில் கொல்கத்தாவில் செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெறவிருந்த கச்சேரி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரேயா கோஷல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவர் பகிர்ந்துள்ள இஸ்டாகிராம் ஸ்டோரில், “சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த கொடூரமான சம்பவத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். ஒரு பெண்ணாக, அந்த பெண்ணிற்கு நேர்ந்த கொடுமையை நினைக்கும்போது நடுக்கத்தைக் கொடுக்கிறது. இதனால் கொல்கத்தாவில் நடைபெறவிருந்த கச்சேரி அக்டோபர் மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம். 

நம் நாட்டில் மட்டுமல்ல, இந்த உலகில் உள்ள அனைத்து பெண்களுடைய பாதுகாப்பிற்காக பிரார்த்தனை செய்கிறேன். அதனால் என்னுடைய இந்த முடிவை ரசிகர்களும் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். மனித இனத்தின் மிருகங்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம். தயவுசெய்து புதிய தேதியை அறிவிக்கும் வரை பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் எடுத்துள்ள டிக்கெட்டுகள் புதிய தேதி வரை செல்லுபடியாகும். உங்கள் அனைவரையும் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.  கொல்கத்தாவில் கடந்த 9ஆம் தேதி (09.08.2024) பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.