2K கிட்ஸ்'களை ‘கவரும்’ சிம்பு : போஸ்டருடன் புதிய பட அறிவிப்பு!
நடிகர் சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு இன்று மாலை வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சற்றுமுன் அந்த படத்தின் அறிவிப்பு அட்டகாசமான போஸ்டர் உடன் வெளியானது. இதையடுத்து, சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி எழுந்துள்ளனர்.
சிம்பு நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க இருப்பதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே ஓ மை கடவுளே" என்ற படத்தை இயக்கியுள்ளார். தற்போது பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் உருவாகி வரும் "டிராகன்" என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு, அவர் சிம்புவின் படத்தை இயக்குவார் என்ற அறிவிப்பு தான் இன்று வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சிம்பு தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியபோது, "ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், எனது மிகவும் நெருக்கமான நண்பரும் திறமையான இயக்குனருமான அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று தெரிவித்தார். மேலும் "கட்டம் கட்டி கலக்குறோம்" என்ற கேப்ஷனையும் பதிவு செய்துள்ளார். சிம்புவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.