“பிரசாந்த் எனக்கு ராசியான ஜோடி...” - சிம்ரன்
பிரசாந்த் நடிப்பில் தற்போது வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘அந்தகன்’. இப்படம் இந்தியில் வெளியாகி தேசிய விருது பெற்ற ‘அந்தாதூன்’ திரைப்படத்தின் ரீமேக்காகும். இப்படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கி, தயாரிக்க கலைப்புலி எஸ்.தாணு வழங்குகிறார். இப்படத்தில் சிம்ரன், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, ஊர்வசி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி நீண்ட ஆண்டுகளாகியும் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. ஆனால் பண்டிகை காலங்களில் மட்டும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து போஸ்டர் வெளியிட்டு வந்தனர். இதையடுத்து இப்படத்தின் ட்ரைலர் கடந்த 13ம் தேதி வெளியாகி பார்வையாளர்கள் மத்தியில் கவனம் பெற்றது. அதனைத்தொடர்ந்து இப்படத்தின் முதல் பாடலான ‘அந்தகன் ஆந்தம்...’பாடலை நடிகர் விஜய் வெளியிட்டார். அதில் உமா தேவி மற்றும் ஏகாதேசி ஆகியோர் வரிகளில் அனிருத் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் பாடியிருந்தனர்.
இப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் நேற்று திடீரென இப்படம் ஆகஸ்ட் 9ஆம் தேதியே வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் படக்குழு. அந்த வகையில் கோவையில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு பிரசாந்த், சிம்ரன், ப்ரியா ஆனந்த் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பிரசாந்துடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்தது குறித்து பேசிய சிம்ரன், “ஏற்கனவே நிறைய பிளாக்பஸ்டர் படங்கள் கொடுத்திருக்கிறோம். எனக்கு அவர் ராசியான ஜோடி. அதனால் இன்னுமொரு பிளாக்பஸ்டருக்கு காத்திருக்கிறேன். பிரசாந்த் மீதும் தியாகராஜன் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். ஒரு ப்ரேமில் நடிக்கக் கூப்பிட்டால் கூட கண்டிப்பாக நடிப்பேன்” என்றார். பிரசாந்த் - சிம்ரன் இருவரும் ஜோடி, கண்ணெதிரே தோன்றினால், தமிழ் என 6 படங்களில் இதற்கு முன்பு நடித்தனர். அவை அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.