×

ரெடியாக இருங்க... 'மாவீரன்' ஃப்ர்ஸ்ட் சிங்கிள் குறித்த முக்கிய அறிவிப்பு !

 

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'மாவீரன்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 தமிழ் சினிமாவின் பிசியான ஹீரோவான சிவகார்த்திகேயன், ‘பிரின்ஸ்’ படத்திற்கு பிறகு ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ‘மண்டேலா’ இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார். இந்த படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் முன்னணி நடிகை சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

 

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். கடந்த ஆண்டு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக பல்வேறு தகவல்கள் வெளியாகின. ஆனால் அது வெறும் வதந்தி என படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்தது. 

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதையொட்டி அட்டகாசமான போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் 'ஃகெட் ரெடி போல்க்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது இப்படத்தின் முதல் பாடலுக்கான அறிவிப்பு என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே அந்த பாடல் உடுக்கை மற்றும் ட்ரம் பீட்ஸுடன் உருவாகி வருகிறது. சிவகார்த்திகேயனின் நடனமும் பட்டையை கிளப்பும் வகையில் இருக்கும் என ஏற்கனவே தகவல் கசிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.