×

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்திற்கு தடையா ?... நிபந்தனை விதித்த உயர் நீதிமன்றம் !

 

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. 

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தடை செய்யக்கோரி இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெகதீசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் படத்தில் வில்லனாக நடித்துள்ள மிஷ்கின் இடம்பெற்றுள்ள காட்சிகளில் அவர் கட்சி கொடியாக தங்களது கட்சியின் கொடி பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே அந்த கொடியை நீக்கும் வரை படத்திற்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சாந்தி டாக்கீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், படத்தில் இடம்பெறுவது இந்திய ஜனநாயக கட்சியின் கொடி அல்ல. இளம் காக்கி, மஞ்சள், இளம் காக்கி என்கிற அடுக்கில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்தில் காட்டப்படும் காட்சிகள் அனைத்தும் கற்பனையானவை. மனுதாரர் கூறுவதை போல் செய்தால் காட்சிகள் முழுமையாக மாற்ற 20 நாட்களாகும. 750-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ள அந்த படம் வெளியாகவிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என கூறினார். 

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, எந்த அரசியல் கட்சியையும் குறிப்பிடவில்லை என Disclaimer வெளியிட வேண்டும் என படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்டார். அதேநேரம் இந்திய ஜனநாயக கட்சியின் கொடியை பிரதிபலிக்காத வகையில் காட்சிகளில் இடம்பெறும் கொடியின் நிறத்தில் மாற்றங்களை செய்த பிறகே ஓடிடி மற்றும் சாட்டிலைட்டில் வெளியிட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.