×

“அஜித் கொடுத்த அந்த ஒரு அட்வைஸ்” - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

 

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அமரன்’. இப்படத்தை கமல் தயாரித்திருக்க சாய் பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த முன்னாள் இராணுவ வீரர், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் மற்றும் ‘ஹே மின்னலே’ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இப்படம் வருகிற தீபாவளியன்று(31.10.2024) வெளியாகவுள்ளது. இதனால் புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  


இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் மணிரத்னம், தயாரிப்பாளர் தாணு, லோகேஷ் கனகராஜ், மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தினர் உள்ளிட்ட பல்வேறு திரைபிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் படம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.  

அதில் அஜித் குறித்து பேசியிருந்தார். அவர் பேசியதாவது, “என்னுடைய நண்பர் ஒருவரின் தீபாவளி நிகழ்ச்சிக்காக போனேன். அங்க அஜித் சார் இருந்தார். என்னை பார்த்தவுடன் கை கொடுத்து அவர் சொன்ன முதல் வார்த்தை, வெல்கம் டூ பிக் லீக் என்றார். பின்பு உங்களுடைய வளர்ச்சியை பார்த்து மத்தவங்க இன்செக்யூரா இருக்குறாங்கனா நீங்க பிக் லீக்-கில் இருக்குறீங்கன்னு அர்த்தம்-னு சொன்னார். எனக்கு ஒன்னுமே புரியல. அவர் என்னுடைய சீனியர். அவர் கூப்பிட்டு இப்படி பண்ணனும் அப்படி பண்ணனும் என ஈஸியா சொல்லிட்டு போய்விடலாம். ஆனால் அவர் அப்படி சொல்லவில்லை. 


அவர் சொன்னதை வைத்து நான் புரிஞ்சிகிட்டது. ஒரு விமர்சனம் நம்ம மேல வைக்கப்பட்டா அது உள்ள இருக்கிற அர்த்தத்தை முதல்ல பார்க்கனும். படம் சரியில்லை என்பது சரியான விமர்சனம். அதாவது படத்தை திருத்திக்கனும் என்ற அர்த்தம். ஆனால் நம்மளே காலி என விமர்சனம் வரும் போது அதை நம்பக்கூடாது என புரிந்து கொண்டேன்” என்றார்.