×

"இன்று முதல் சில காட்சிகள் நீக்கப்பட்டு.." - மெய்யழகன் படத்தின் நீளம் குறைப்பு
 

 

மெய்யழகன் திரைப்படத்தில் 18 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் பிரேம்குமார் அறிவித்துள்ளார்.இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்தி - அரவிந்த் சுவாமி நடிப்பில் உருவான திரைப்படம் மெய்யழகன். கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான இந்த படம், கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது. ஆனால், வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு வரும் அரவிந்த் சுவாமிக்கும், உள்ளூரிலிருக்கும் கார்த்திக்கும் இடையேயான உறவைப் பழைய நினைவுகளுடன் பேசும் படமாக உருவாகியுள்ளதால், படத்தில் இடம்பெற்ற பல காட்சிகள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அதேவேளையில் திரைப்படத்தில் நீளம் அதிகம் என்ற கருத்தும் இருந்தது.
இந்நிலையில்தான் திரைப்படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் பிரேம் குமார் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்பால் உருவான மெய்யழகனுக்கு பேரன்பை அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் நன்றி. திரைமொழியின் வழக்கமான பாணியில் இருந்து விலகிய ஒரு திரை அனுபவத்திற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையை விதைத்ததற்கு நன்றி. ஏராளமான அனுபவ பகிர்வுகள் இந்த படைப்பின் மீதான நம்பிக்கையை அதிகரித்திருக்கின்றன. மெய்யழகனை உணர்ந்து புரிந்துகொண்ட பெரும்பாலானோரின் அன்பும், ரசனையும் பிரமிக்க வைக்கின்றன.படத்தின் நீளம் குறித்து மட்டும் சில அக்கறை குரல்கள் வெளிப்பட்டு வந்த நிலையில், ஒரு படைப்பாளியின் முதல் கடமை மக்களின் குரல்களுக்கு செவிமடுப்பது. எல்லோரது திருப்தியும் எனக்கு முக்கியம். அதுவே மெய்யழகனின் மீது நீங்கள் கொண்ட அன்பிற்கு நான் செய்யும் கைம்மாறு.

null



எனவே இன்று முதல் சில காட்சிகள் நீக்கப்பட்டு, 18 நிமிடங்கள் 42 நொடிகள் குறைக்கப்பட்டு, 2 மணி நேரம் 38 நிமிடங்களாக திரையிடல் தொடரும். மெய்யழகனின் நீளம் மட்டுமே குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவன் பேசும் அன்பும், திரை அனுபவமும் சற்றும் குறையவில்லை” என தெரிவித்துள்ளார்.