×

"சூரி மற்றும் வினோத்ராஜை கைக்கூப்பி வணங்க வேண்டும்" : இயக்குனர் பாலா நெகிழ்ச்சி ! 

 


கொட்டுக்காளி படத்தை பார்த்த இயக்குநர் பாலா, சூரி மற்றும் வினோத்ராஜ் போற்றப்பட வேண்டிய கலைஞர்கள் மட்டுமல்ல, கைக்கூப்பி வணங்கப்பட வேண்டியவர்கள் என படக்குழுவினரை பாராட்டியுள்ளார். அவ்வப்போது சில திறமையான இயக்குநர்கள் வந்து தமிழ் சினிமாவின் தரத்தை உலகத்தரத்திற்கு கொண்டு செல்வார்கள். அந்த வகையில் தனது முதல் படத்திலேயே ஆஸ்கர் வரை சென்று தமிழ் மக்களுக்கு பெருமை சேர்த்தவர் இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ். இவர்‌ இயக்கிய 'கூழாங்கல்' என்ற படம் சர்வதேச அளவில் மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்றது. ஆஸ்கர் மேடை வரை சென்றது. இதுவரை உலக சினிமாக்களில் மட்டுமே பார்த்து பழகிய திரை மொழி பி.எஸ்.வினோத் ராஜிடம்  இருந்தது.

அதன்பிறகு இவர் இயக்கிய திரைப்படம் 'கொட்டுக்காளி'. சூரி, அன்னாபென் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இப்படமும் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகள் குவித்து வருகிறது.

இந்நிலையில் 'கொட்டுக்காளி'  திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவராக பார்க்கப்படும் பாலா, கொட்டுக்காளி படத்தை பார்த்து வெகுவாக பாராட்டியுள்ளார்.

 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நம்முடைய தமிழ் திரைப்படத்துறையில் இருந்து, உலகம் வியக்கும் கலைஞர்கள் வந்து கொண்டே இருப்பார்கள் என்பதற்கான முக்கியமான சான்றுகளில் ஒன்று, இந்தக் 'கொட்டுக்காளி'. ஆழமான இக்கதையை, எளிமையாகவும் வலிமையாகவும் எடுக்க முடியும் என்று களமாடி, ஓர் அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறார், இயக்குநர் வினோத்ராஜ். குறிப்பாக, சூரி தனது கதாப்பாத்திரத்தை உணர்ந்து, ஆர்ப்பாட்டமும் அமைதியும் ஒரு சேர இணைந்த நடிப்பை வெளிப்படுத்தி, ஒரு நடிகராகத் திரையுலகில் ஆழச்சுவடு பதித்து தாண்டவமாடியிருக்கிறார் என்றால் அது மிகையாகாது.

படத்தின் தலைப்பிற்கே நியாயம் சேர்க்கும் வகையில், மிக அழுத்தமான நடிப்பைத் தந்திருக்கிறார் நாயகி அன்னா பென். படத்தில் நடித்திருக்கும் அனைவருமே தாங்களும் ஒரு முக்கியக் கதாப்பாத்திரம் தான் என்று சவால் விட்டிருக்கிறார்கள். காட்சியை வழி நடத்திச் சென்ற ஒளிப்பதிவாளர் சக்திவேல், மிகவும் போற்றுதலுக்குரியவர். சிவகார்த்திகேயனுக்கு வினோத்ராஜ் சார்பாக எனது நன்றிகள். சூரி மற்றும் வினோத்ராஜ் போற்றப்பட வேண்டிய கலைஞர்கள் மட்டுமல்ல, கைக்கூப்பி வணங்கப்பட வேண்டியவர்கள். கொட்டுக்காளி படக்குழுவினர் அனைவரும் உயர்ந்து நிற்கிறார்கள்" என்று பாலா பாராட்டியுள்ளார்.