மேடை சரிந்து விபத்து; பிரியங்கா மோகனுக்கு காயம்
தமிழ் மற்றும் தெலுங்கில் கவனம் செலுத்தி வரும் பிரியங்கா மோகன், தற்போது பிரதர் பட ரிலீஸுக்காக காத்திருக்கிறார். ஜெயம் ரவி நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகின்ற தீபாவளி அன்று வெளியாகிறது. இப்படத்தை அடுத்து தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தில் ‘கோல்டன் ஸ்பேரோ..’ பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்தப் பாடல் சமீபத்தில் வெளியாகி ந்ல்ல வரவேற்பை பெற்றது. மேலும் தெலுங்கில் நடிகரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் நடித்து வரும் ‘ஓஜி’ படத்திக் நடித்து வருகிறார்.
சமீபத்தில் பிரதர் பட இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியங்கா மோகன், ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க அவரை ஃபாலோ செய்தபோது கோபமாக பேசி பின்பு போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். அதே சமயம் காரிலிருந்து பிரயங்கா மோகனை இறங்கவிடாமல் செல்ஃபிக்கு எடுக்க முயன்ற ரசிகர்களை ‘கார்குள்ளயே வந்து உட்கார்ந்துக்கோங்களேன்’ என பேசினார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில் பிரியங்கா மோகன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மேடை சரிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. தெலுங்கானாவில் உள்ள தோரூரில் ஒரு வணிக வளாக தொடக்க நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் பிரியங்கா மோகன். அவரை காண ஏராளமான ரசிகர்கள் அங்கு குவிந்தனர். அப்போது பிரியங்கா மோகன் மற்றும் நிகழ்ச்சியாளர்கள் நின்று கொண்டிருந்த மேடை திடீரென சரிந்து விழுந்தது. பின்பு அவர் கூட்ட நெரிசலுக்கு இடையே பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டார். இது அங்கு பரபரப்பை கிளப்பியது.