ஜவான் பாடலுக்கு உற்சாக ஆட்டம் போட்ட நட்சத்திர நடிகைகள்
நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரியா அட்லீ ஆகிய இருவரும் ஜவான் பட பாடலுக்கு உற்சாகமாக நடனமாடிய காணொலி வெளியாகியுள்ளது.
ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில் கிங்கான் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜவான். படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். கடந்த 7-ம் தேதி உலகம் முழுவதும் இத்திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் 620 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து புதிய சாதனையைப் படைத்து வருகிறது. தென்னிந்திய சினிமாவில் ப்ளாக்பஸ்டர்களை வழங்கிய இயக்குநர் அட்லீ இத்திரைப்படத்தில் கிங்கான் ஷாருக்கானை இதுவரை ரசிகர்கள் கண்டிராத தோற்றத்தில் மாஸாக காட்சிப்படுத்தியுள்ளார். ஆக்சன், ரொமான்ஸ், காமெடி, இரண்டு விதமான கதாப்பாத்திரம், பலவிதமான லுக் என ஷாருக்கான் ரசிகர்களுக்கு இப்படம் மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது. படம் வெளியான நாள் அன்று நடிகை கீர்த்தி சுரேஷ் புகைப்படத்துடன் அட்லீக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஜவான் பட பாடலுக்கு கீர்த்தி சுரேஷூம், அட்லீயின் மனைவியும் நடிகையுமான பிரியாவும் சேர்ந்து நடனமாடிய காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவின் இடையே இயக்குநர் அட்லீ, செல்ல நாயுடன் நடந்து செல்வதும் காண்போருக்கு சிரிப்பூட்டியது.