×

'தளபதி 69' படத்தில் இணைந்த ஸ்டைலிஷ் இயக்குநர்! 
 

 

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தில் கௌதம் மேனன் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கேவின் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் விஜய் தனது 69வது படத்தில் நடிக்கவுள்ளார். விஜய், ’தமிழக வெற்றிக கழகம்’ என்ற அரசியல் கட்சி தொடங்கியுள்ளதால் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதன் காரணமாக தற்போது எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளது தனது கடைசி படம் என தெரிவித்துள்ளார்.

சமூக பிரச்சனைகளை தனக்கே உரித்தான பாணியில் கூறும் எச்.வினோத்துடன் விஜய் தனது கடைசி படத்தில் நடிக்கவுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் அரசியல் ரீதியாக இருக்குமா அல்லது எச்.வினோத்தின் சீரியஸான கதையாக இருக்குமா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.


இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கும் நிலையில், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா ஃபைஜூ ஆகியோர் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. பிரேமலு திரைப்படம் மூலம் இளைஞர்கள் மனதை கொள்ளையடித்த மமிதா ஃபைஜூ விஜய்யுடன் நடிப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று படக்குழு மேலும் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்பரைஸ் கொடுத்துள்ளது. இயக்குநரும், நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் தளபதி 69இல் நடிக்கிறார் என படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே லியோ படத்தில் விஜய்யுடன் கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ’தளபதி 69’ படத்தின் படப்பிடிப்பு நாளை (அக்.04) தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.