’மூக்குத்தி அம்மன் 2’ படப்பிடிப்பில் சுந்தர் சி - நயன்தாரா மோதலா..? நடிகை குஷ்பு விளக்கம்...!

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் சுந்தர் சி கூட்டணியில் உருவாகி வரும் ’மூக்குத்தி அம்மன் 2’ படப்பிடிப்பில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு நடிகையும் தயாரிப்பாளருமான குஷ்பு விளக்கமளித்துள்ளார்.
வேல்ஸ் ஃபிலிம் நிறுவனத்துடன் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் அவ்னி சினிமேக்ஸ், ஐ வி ஓய் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் பி ஃபோர் யூ மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ’மூக்குத்தி அம்மன் 2’ படப்பிடிப்பு மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால், சமீபத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதன் விளைவாக நயன்தாராவை சுந்தர் சி படத்தில் இருந்து வெளியேற்றி விட்டதாகவும் ஒரு வதந்தி வைரலாக பரவியது.
இந்த விவகாரத்திற்கு நடிகை குஷ்பு நேரடியாக பதிலளித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், மூக்குத்தி அம்மன் 2’ பற்றிய தேவையற்ற கதைகள் பரவி வருகின்றன. தயவுசெய்து அவற்றை யாரும் நம்ப வேண்டாம். படப்பிடிப்பு சுமூகமாக நடைபெற்று வருகிறது. ஒரு விஷயம் உறுதியாக சொல்லலாம், சுந்தர் சி ஒரு அனுபவம் மிக்க, நேர்மையான இயக்குநர். அதுபோல், நயன்தாராவும் தனது திறமையால் பல கதாபாத்திரங்களை உயிர்ப்பித்த ஒரு திறமைசாலி. மூக்குத்தி அம்மன் கேரக்டர் மீண்டும் அவருக்கு கிடைத்ததில், அவர் பெரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்.